நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான இலங்கை அரசியல் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கீழ்த்தரமானதாகவும் அழுக்கானதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஒரு முன்னணி வேட்பாளர் என ஜே.வி.பி. உரிமை கோருகிறது. அதை நிராகரிப்பவர்கள், சமூக ஊடகங்களின் உதவியுடன் இந்தப் போலியான கருத்து பரப்பப்படுவதாகக் கூறுகின்றனர். இருந்த போதிலும் ஜே.வி.பி. அரசியல் தளத்தில் தான் இழந்ததை ஓரளவு மீட்டுள்ளதுடன், மக்களில் ஒரு தரப்பினர் அவர்கள் நாட்டை ஆளத் தகுதியுள்ள ஒரு அரசியல் கட்சி எனவும் நம்புகின்றனர்.

போட்டியாளர்கள் கிளப்பும் எதிர்ப் பிரச்சாரங்களால் மக்கள் மத்தியில் தம்மைப் பற்றி தவறான அபிப்பிராயம் உருவாகக்கூடும் என அஞ்சும் ஜே.வி.பி. அதைத் தடுப்பதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. பெப்ருவரி 25 ஆம் திகதி ஒரு பகுதி வர்த்தகப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பனவற்றின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, தாம் ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துடமைகளை எடுத்துக் கொள்ளுவோம் என்ற பிரச்சாரத்தை மறுத்தார்.

உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்வதால், அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூட மாறாது என்று சொல்ல முடியாது. எனவே ஜே.வி.பியும் மாற்றத்துக்குள்ளாவது இயல்பானது. ஜே.வி.பி. தனது கம்யூனிச மற்றும் தீவிரவாத நிலைப்பாட்டிலிருந்து கருத்தியல் ரீதியாக மாறி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நாட்டிலுள்ள பல்வேறு மார்க்சிச – லெனினிச கட்சிகள் ஊழியர்கள் அடிப்படையிலான புரட்சிகரமான சிந்தனையுள்ள அமைப்புகளாக ஆரம்பத்தில் உருவாகிப் பின்னர் பல தசாப்தங்களுக்கு முன்னரே அரசியல் ரீதியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.

தனிப்பட்ட சொத்துடமை மற்றும் உற்பத்தி மீது கட்டுப்பாடு செலுத்துதல் என்பன பற்றிய திசாநாயக்கவின் கருத்துகள் ஜே.வி.பி. முன்னர் 36 பக்கங்களில் வெளியிட்ட புரட்சிகர கொள்கைப் பிரகடனத்தை (Revolutionary Policy Declaration) மறுப்பதாக உள்ளது. ‘ஏகாதிபத்தியத்துக்கு மரணம், மக்களுக்கு விடுதலை! முதலாளித்துவத்துக்கு மரணம், சோசலிசத்துக்கு வெற்றி!’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் பின் அட்டையில் கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து (Communist Manifesto) ஒரு மேற்கோள் போடப்பட்டிருந்தது. ‘கம்யூனிஸ்ட் புரட்சி உற்பத்தி உறவுகளில் மிகவும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தும். பாரம்பரியமான கருத்துகளில் மிகவும் அடிப்படையான மாற்றங்களையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.’ என்பதே அந்த மேற்கோள்.

ஜே.வி.பி. முன்பு வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் பின்வரும் முக்கியமான பகுதிகள் இடம் பெற்றிருந்தன: ‘முழுமையான திட்டமிட்ட சோசலிச பொருளாதாரக் கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும், தற்போதுள்ள முதலாளித்துவ கலப்புப் பொருளாதாரம் ஒழிக்கப்படும், எல்லாவிதமான வெளிநாட்டு முதலீடுகளும் நட்டஈடு எதுவுமின்றி அரசுடமையாக்கப்படும், சுதந்திர வர்த்தக வலயங்கள் ஒழிக்கப்படும், அந்த வலயங்களிலுள்ள சொத்துகளும் வர்த்தகங்களும் நட்டஈடின்றி அரசுடமையாக்கப்படும், வங்கிகளும், கடன் நிறுவனங்களும் மற்றும் சகல ஏகபோக நிறுவனங்களும் எவ்விதமான கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடின்றி தேசியமயமாக்கப்படும், ஏகாதிபத்திய வங்கிகளின் கடன்களும் அவற்றுக்கு வழங்கும் வட்டியும் ஒழித்துக்கட்டப்படும், சிறிய கைத்தொழில்கள் உட்பட தனியார் சொத்துடமை திட்டமிட்ட அடிப்படையில் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் ஒழிக்கப்படும். ஒரு புதிய வடிவிலான நாணய முறை அறிமுகப்படுத்தப்படும்.’

ஜே.வி.பியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. தலைமை இந்த பிரகடனம் பற்றி அப்பொழுது குறிப்பிடுகையில், ‘ இந்த கொள்கைப் பிரகடனம் முதலாளித்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்திலும், முதலாளித்துவப் பாராளுமன்றம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் அவற்றுக்கு வெளியேயான நிறுவனங்கள் என்பனவற்றுக்கான தேர்தல் பிரச்சாரங்களிலும் தலையானதாக இருக்கும். இந்த கொள்கைப் பிரகடனம் முதலாளித்துவத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஆயுதமாகத் திகழும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

தங்களுடைய கட்சியின் உண்மையான கொள்கைப் பிரகடனம் இவ்வாறு இருக்கையில், தற்போதைய ஜே.வி.பி. தலைவர்கள் சுதந்திர வர்த்தகக் கொள்கைகளுடனும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் முதலாளித்துவ முகாம்களுடனும் எவ்வாறு ஒத்துப் போகிறார்கள்? தனியார் சொத்துடமை அடிப்படையிலான உற்பத்தி முறையை எப்படி ஏற்றுக் கொண்டுள்ளார்கள்? அவர்கள் விஜேவீரவின் கொள்கைகளை கைவிட்டு விட்டார்களா அல்லது முதலாளித்துவத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஆயுதத்தை கைவிட்டு விட்டார்களா? அப்படி இருந்தால் அவர்கள் ஏன் இது சம்பந்தமாக ஒரு பகிரங்க பிரகடனத்தை செய்யவில்லை? அது மட்டுமின்றி, தமது கட்சி ஸ்தாபகரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லி அவரது நினைவு தினத்தை ஏன் வருடாவருடம் பெருமெடுப்பில் கொண்டாடி வருகிறார்கள்?

ஜே.வி.பி. தமது ஸ்தாபகத் தலைவரின் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் இரு தடவைகள் நாட்டில் இரத்த ஆறு ஓட வைத்து, பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது. இது பற்றி நாட்டு மக்களுக்கோ அல்லது வர்த்தக சமூகத்தினருக்கோ மேலதிக விளக்கம் எதுவும் அளிக்கத் தேவையில்லை.

(கொழும்பில் இருந்து வெளியாகும் ‘த ஐலன்ட்’ பத்திரிகையின் பெப்ருவரி 27 ஆம் திகதி பதிப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தின் சாராம்சம்)