வானவில் இதழ் 79-80-81

செப்ரெம்பர் 23, 2017

அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும்

‘நல்லாட்சி’ தூய்மையாகிவிடாது!

ரண்டரை வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 08இல் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்றபோது நாட்டு மக்களுக்கு ‘நல்லாட்சி’ வழங்கப்போவதாகச் சொல்லியே பதவி ஏற்றது.

குறிப்பாக, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இடம் பெற்ற ஊழல், மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் எதுவும் தமது ஆட்சியில் இருக்காது என மைத்திரியும், ரணிலும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்

அத்துடன், சிறுபான்மை தேசிய இனங்களின் – குறிப்பாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் அமைப்;பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை எதுவும் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஆதரவளித்திருந்தது.

அதேபோல, முஸ்லீம் கட்சிகளும் நிபந்தனை எதுவும் இன்றி மைத்திரி – ரணில் அணிக்கு ஆதரவளித்திருந்தன. எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிடின், மைத்திரியோ ரணிலோ ஒருபோதும் பதவிக்கு வந்திருக்க முடியாது என்பது சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும்.

இவை தவிர, யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்து நிiவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும்;; மைத்திரி – ரணில் அரசு வாக்குறுதி அளித்தது.

ஊடக சுதந்திரமும், மனித உரிமைகளும் பேணப்படும் எனவும் மைத்திரி – ரணில் அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இந்த அரசாங்கம் இற்றைவரை நிறைவேற்றவில்லை.

அதுமட்டுமின்றி, முன்னைய அரசால் தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விலைவாசி கட்டுக்கடங்காமல் எகிறிச் செல்வதைக் காண முடிகிறது. பணவீக்கம் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் எந்தத் திசையை நோக்கினாலும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றவண்ணம் உள்ளன.

இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் அரசைக் கொண்டு நடாத்த முடியாத அளவுக்கு வலுத்துச் செல்கின்றது.

ஆனால் அரசாங்கமோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகாண முடியாத கையறு நிலையில், எல்லாப் பிரச்சினைகளுக்கும் முன்னைய அரசாங்கத்தில் பழியைப் போட்டுத் தப்பிக்க முயல்கிறது. அத்துடன் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரையும், தமது அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டுப்பற்றுடன் உறுதியாக நிற்கும் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் பழிவாங்கும் எண்ணத்துடன் அவர்கள் மீது எண்ணற்ற குற்றச்சட்டுகளைச் சுமத்தி, அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளுக்கும், நீதிமன்ற விசாரணைகளுக்கும் அழைத்து அலைக்கழிக்கின்றது.

அத்துடன் இந்த ஆரவாரத்தில் சத்தம் சந்தடியின்றி நாட்டின் முக்கியமான வளங்களை இந்தியா, சீனா மற்றும் மேற்கு நாடுகளுக்கு தாரைவார்த்து வருகின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், “இலங்கை ஜனாதிபதி ட்ரம்ப்பின் மூலோபாயத் திட்டத்தில் முக்கியமான நாடாக இருக்கின்றது” எனத் தெரிவித்ததின் மூலம், நமது நாட்டை மைத்திரி – ரணில் கூட்டு எத்திசையை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஊழல் மோசடிகள் அற்ற ‘நல்லாட்சி’ நடாத்தப் போவதாகச் சொன்ன இந்த அரசாங்கத்தில்தான், முனனொருபோதும் இலங்கையில் நிகழாத அளவுக்கு ஊழலும் மோசடிகளும் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளை அரசாங்கமே நியமித்த விசாரணைக் குழுக்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

முக்கியமாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான அர்ஜூனா மகேந்திரன் பிணைமுறி ஊடாக மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா மோசடியை ‘கோப்’ விசாரணை முடிவும், ஜனாதிபதி ஆணைக்குழுவும் அம்பலத்துக்குக் கொணடு வந்தும் இன்றுவரை அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணிலுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தும், அவர் பதவி விலகாமல் பதவியில் அழுங்குப்பிடியாக பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய புள்ளியான ஐ.தே.கவைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மோசடி அம்பலமானதால் பதவி விலக வேண்டி வந்தது. அப்படிப் பதவி விலகியவருக்கு எதிராக நீதித்துறையின் ஊடாகவும், தனது கட்சி அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய பிரதமர் ரணில், அதைவிடுத்து அவரது ‘முன்மாதிரி’யைப் புகழ்ந்து, அவர் மீதான குற்றக்கறையைக் கழுவ முயற்சிக்கிறார்.

இதில் முக்கியமான விடயமென்னவென்றால், சில நாட்களுக்கு முன்னர்தான் வெளிவிவகார அமைச்சராக இருந்த இன்னெரு ஐ.தே.க. முக்கிய புள்ளியான மங்கள சமரவீரவை அவரது சேவை திருப்தி இல்லாததால் வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து மாற்றி அப்பதவி ரவி கருணநாயக்கவுக்கு வழங்கப்பட்டதுடன், ரவி கருணநாயக்க வகித்துவந்த நிதியமைச்சர் பதவி மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டது.

உண்மையில் இந்த அமைச்சு மாற்றங்கள் கண்துடைப்புக்காகவே நடாத்தப்பட்டது. இது நடைபெறுவதற்கு முதல், அமைச்சரவையில் பல அமைச்சர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என ஜனாதிபதி கருதுவதால், முழுமையானதொரு அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொள்ளப் போகிறார் என ஊடகங்களில் பெரிதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் ‘மலையைக் கெல்லி எலியைப் பிடித்தது’ போல, இந்த இரண்டு அமைச்சுகளும்தான் மாற்றப்பட்டது. ஆனால் இந்த மாற்றம் நடந்து சிறிது நாட்களிலேயே ரவி கருணநாயக்க பதவியை இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஊழல் மோசடியில் ஈடுபட்டு, பதவி விலகி, முழு உலகமும் எம்மைப் பார்த்து நகைக்கையில், முன்னர் சில தவறுகளுக்காக இதே அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து பதவி விலக வைக்கப்பட்ட இன்னொரு முன்னாள் அமைச்சரான ஐ.தே.க.

புள்ளி திலக் மாரப்பன புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்படியானால், முன்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் காலாவதியாகிவிட்டனவா? அதுமட்டுமின்றி, இன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி விலகி இருக்கும் ரவி கருணநாயக்கவுக்கும் எதிர்காலத்தில் திரும்பவும் ஏதாவதொரு அமைச்சுப் பதவி வழங்கப்படுமா?

இது ஒருபுறமிருக்க, கொழும்பிலுள்ள ‘சைற்றம்’ என்னும் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிடும்படி மாணவர்கள், ஆசியர்கள், வைத்தியர்கள், பெற்றோர்கள் என முழுநாடும் திரண்டு நின்று போராடுகையில், சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன என்ற தனி நபருக்காக அதை மூடாது அரசாங்கம் அழுங்குத்தனமாக நிற்கிறது. ‘நல்லாட்சி’ என்றால் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கவல்லவா வேண்டும். ஆனால் இந்த அரசு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இவை மட்டுமின்றி, தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவித்தல், தமிழ் கைதிகள் விவகாரம் போன்ற பிரச்சினைகளிலும் அரசாங்கம் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் செய்யவில்லை.

மறுபக்கத்தில் மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடாத்தாது இழுத்தடிக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத, தேசத்துரோக நடவடிக்கைகளை அதிகமான ஊடகங்கள் விமர்ச்சித்து எழுத ஆரம்பித்திருப்பதால், ஜனாதிபதியும் பிரதமரும் இப்பொழுது, தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பெரிதாகப் பேசி வந்த ஊடக சுதந்திரம் பற்றிய கதைகளை மறந்து, ஊடகங்கள் மீது ஏறிப்பாய ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், மைத்திரி – ரணில் அரசு நாட்டை ஆட்சி செய்யும் தகுதியை இழந்துவிட்டது என்பது தெளிவாகின்றது. இதற்கு ஒரே பரிகாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி, மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகை செய்யும்படி அரசைக் கோரி மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதுதான். ஏனெனில் மக்கள் கிளர்ச்சி ஒன்றின் மூலம் மட்டுமே இந்த அரசாங்கத்தை ஒருவழிக்குக் கொண்டுவர முடியும்.

வானவில் இதழ் எழுபத்தொன்பது, எண்பது மற்றும் எண்பத்தொன்றினை முழுமையாக வாசிப்பதற்கு:

VAANAVIL 79-80-81_2017 

Advertisements

இதழ் 79-80-81, கட்டுரை 5

செப்ரெம்பர் 23, 2017
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் 40ஆவது நினைவு தினத்தையொட்டி (2017 செப்ரெம்பர்) இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

எம் மத்தியில் – எம் கார்த்திகேசன்

-எம்.குமாரசாமி

யாழ் குடாநாட்டின் அரசியல், கல்வி, கலாச்சாரத்துறைகளில் 1944ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டுவரை தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவரும், இத்துறைகளின் முன்னேற்றங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவற்றை முன்னெடுத்துச் சென்ற அறிஞர்களில் காலஞ்சென்ற மு.கார்த்திகேசன் ஒரு தனியிடத்தைப் பெற்றவராவார். அவர் இறந்து இவ்வருடம் (2002) செப்டெம்பர் மாதத்துடன் 25 ஆண்டுகள் கழிகின்றன. அவர் அரசியலுக்காக கம்யூனிஸ்ட் கட்சியையும், கல்விக்காக ஆசிரியத் தொழிலையும், கலை கலாச்சாரத்திற்காக அவர் வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதியிலுள்ள சமூக நிறுவனங்களின் ஈடுபாட்டையும், மாநகரசபைசபை வரியிறுப்போர் சங்க உறுப்புரிமைக்காக யாழ்மாநகரசபை அங்கத்துவப் பதவியையும் பயன்படுத்தினார். சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இவர் தன் முழுக்கவனத்தைக் காலநேரம் பாராது, சாதி சமயம் பாராது, பிரதிபலன் நோக்காது செலுத்தியமைக்கான ஒரேயொரு காரணமென்னவெனில், அவர் ஒப்பற்ற உன்னதமான சமூகப் பங்காளனாகச் சமூகத்தை நேசித்த தலைசிறந்த வழிகாட்டி. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை யாழ் மாவட்டத்தில் ஸ்தாபித்து, அதன் சித்தாந்தத்தை அன்றைய காலகட்டத்தில் அங்கு வேரூன்ற வழிவகுத்த சிறந்த போதானாசிரியர். இவர் இலங்கைக் கம்யூனிஸ்ட்டுகளின் பரம்பரையில் முதற் பரம்பரையைச் சேர்ந்தவராவார்.

இலங்கை வருகை
கார்த்திகேசனின் கம்யூனிஸ்ட் வாழ்க்கை நெறி, அவர் அன்றைய மாலாயாவிலிருந்து இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி பெறுவதற்காக அவரது தகப்பனால் அனுப்பப்பட்ட காலந்தொட்டே ஆரம்பமாகிறது. மலாயாவில் லண்டன் மெர்ரிகுலேசன் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு வந்து கல்வி கற்ற காலத்தில் பல்கலைக்கழகக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவர் கலைப்பிரிவிலே கல்வி பயின்றபோது சமகாலத் தோழர்களான என்.சண்முகதாசன், எல்.ஆரியவன்ச, எஸ்.கே.கந்தையா, ஏ.சிவலிங்கம் போன்றோரும் அங்கே கல்வி பயின்று வந்தனர். இக்காலகட்டத்தில் ஏ.வைத்திலிங்கம் அவர்கள் மேற்படிப்புக்காக இலண்டன் சென்றிருந்தார். மேற்குறிப்பிட்டவர்களில் என்.சண்முகதாசன், எல்ஆரியவன்ச ஆகியோர் கார்த்திகேசன் வகுப்பிலிருந்த சகபாடிகளாவர். இடதுசாரிப் போக்குடைய இத்தகைய மாணவர் மேல் முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினரும், கணிதப் பேராசிரியருமான காலஞ்சென்ற சி.சுந்தரலிங்கம் அவர்களின் கடைக்கண் பார்வையும் விழுந்திருந்தது. இவர்களில் இன்றும் வாழ்பவர் முன்னாள் உலக ஆசிரிய சங்க சம்மேளனத்தின் தலைவரும், இன்றைய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான எல்ஆரியவன்ச அவர்களேயாகும். அக்காலகட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழக மேற்பார்வையாளராக சுந்தரலிங்கம் அவர்கள் விளங்கினார்.

பிறநாட்டுச் சூழ்நிலை
இக்காலகட்டத்திலே ரஸ்யாவில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியின் தாக்கமும், மேற்கு நாடுகளில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டங்களும், ஸ்hபனியக் குடியரசின் உதயமும், உலகளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் அரசியல் உணர்வைக் கூர்மைப்படுத்தின. பீற்றர் கெனமன் அவர்களும், வைத்திலிங்கம் அவர்களும் 1936 – 1939 காலப்பகுதியில் நடைபெற்ற ஸ்பானிய யுத்தத்தில், ஸ்பானியக் குடியரசுக்கு உதவுவதற்காக ஐக்கிய ராஜ்யத்திலிருந்து கொண்டே சர்வதேசத் தொண்டர் சபையில் பணியாற்றி வந்தனர். இந்நேரத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியில் என்.சண்முகதாசன் தலைமையில் மாணவர் கவுன்சில் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு சோவியத் ரஸ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. எல்ஆரியவன்ச அவர்களே அந்தக் கவுன்சிலின் செயலாளராகக் கடமையாற்றினார். காரத்திகேசன் அவர்கள் கவுன்சிலின் பிரச்சார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, அரசியல் செய்திகள் கட்டுரைகளைத் தாங்கி வந்த ‘மாணவர் செய்தி – student News’ என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பமும் முழுநேர ஊழியமும்
இந்தப் பின்னணியில், இளம் சோவியத் யூனியனுக்;கு ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட, உலகெங்குமுள்ள புரட்சிகரச் சிந்தனையுடையோர் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக இயக்கங்களை ஆரம்பித்தனர். இலங்கையிலும் ‘சோவியத் நண்பர்கள்’ என்ற அமைப்பு உருவாகியது. இந்த அமைப்பின் முக்கிய பங்குதாரராக கார்த்திகேசன் இருந்தார். பின்னர் இந்த ஸ்தாபனம் பீற்றர் கெனமன், அ.வைத்திலிங்கம் ஆகியோரின் வருகையுடன் 1940ம் ஆண்டளவில் ஐக்கிய சோசலிசக் கட்சியாகப் பரிணமித்தது. 1943ல் ஐக்கிய சோசலிசக் கட்சி கலைக்கப்பட்டு, டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீற்றர் கெனமன், என்.சண்முகதாசன், எல்.ஆரியவன்ச போன்றோருடன் கார்த்திகேசனும் சேர்ந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். கட்சியின் பொதுச்செயலாளராகப் பீற்றர் கெனமனே பணியாற்றினார். கட்சியின் அடிப்படைச் சித்தாந்தம் மார்க்சிசம் – லெனினிசம் ஆகவேயிருந்தது. கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்காக 1945களில் கட்சி முழுநேர ஊழியர்களை நியமித்தது. பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட பல பல்கலைக்கழக மாணவர்கள், கட்சியின் வளர்ச்சியிலும், தொழிற்சங்க நடவடிக்கைளிலும் ஈடுபட்டார்கள். டாக்டர் விக்கிரமசிங்கவைத் தவிர பல முக்கிய உறுப்;பினர்கள் இந்தத் துறைகளில் முன்னின்று உழைத்தனர். கார்த்திகேசனை அவது தந்தை இலங்கைக்கு அனுப்பி சி.சி.எஸ். (C.C.S. – சிலோன் சிவில் சேர்வீஸ்) அரச சேவையில் சேர்க்க விரும்பினார். ஆனால் கார்த்திகேசன் சி.சி.பி (C.C.P.. – சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி)யில் சேர்ந்து கொண்டது தகப்பனாருக்குத் திருப்தியளிக்கவில்லையென அவர் தெரிந்திருந்தும், இலங்கைத் தொழிலாள வர்க்கத்திற்கும், அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கும் பணியாற்ற வேண்டுமென்ற பேரார்வமும், அர்ப்பணிப்பும் அவரை ஓர் முழுநேர ஊழியராக்கியது.

பீற்றர் கெனமன் ஏரிக்கரைப் (Lake House) பத்திரிகை ஸ்தாபனத்தில் வேலை செய்து அப்பதவியைத் துறந்த பின்னரே கட்சியின் பொதுச்செயலாளராகச் செயற்பட்டார். சண்முகதாசன் சி.சி.எஸ். அரச பதவியை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் முழுநேர ஊழியரானார். வைத்திலிங்கம் அவர்கள் அரச பதவிகளுக்குத் தேடிச்செல்லாது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வதற்காக மலைநாடு சென்றார். கார்த்திகேசன் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு கெனமனோடு சேர்ந்து ‘போர்வேட் – Forward’ பத்திரிகையை அச்சடித்துப் பிரசுரித்து, விநியோகித்து, விற்பனை செய்து வந்தார். கட்சிக் காரியாலயத்திலேயே வசித்தும் வந்தார். பெரிய அரச பதவிகள் தேடிவந்தும் அவற்றைத் தட்டிக் கழித்தார். கட்சிக்கு நிதி கிடைக்கும் போது முழுநேர ஊழியர்கட்கு சிறிதளவு நிதியுதவி கிடைக்கும். நிதி இல்லாத போது முழுநேர ஊழியர்கள் அனைவரும் கஸ்டப்பட்டே கட்சி வேலைகளிலும், தொழிற்சங்க வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

கட்சி வேலையும், கல்விச் சேவையும்
கம்யூனிஸ்ட் கட்சி அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு கார்த்திகேசனை யாழ்ப்பாணம் செல்லுமாறும், அங்கு ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்வதுடன், கட்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தது. இதற்கமைய கார்த்திகேசன் யாழ்ப்பாணம் வந்து, நகரின் விக்ரோறியா ரோட்டில் வாடகை வீடொன்றில் வசிக்க ஆரம்பித்தார். அவர் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். காலக்கிரமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பகால உறுப்பினர்களாக ஆர்.ஆர்.பூபாலசிங்கம், எம்.சி.சுப்பிரமணியம், ஏ.அற்புதரட்ணம், அ.சரவணமுத்து, ராமசாமி ஐயர் ஆகியோர் இருந்தனர். செயலாளராக கார்த்திகேசன் செயற்பட்டார். இவர்கள் மூலமாகவே கட்சி யாழ் மாவட்டத்தில் அறிமுகமானது. கார்த்திகேசன் யாழ் இந்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்தே கம்யூனிஸ்ட் இயக்கமும் யாழ் மாவட்டத்தில் வேரூன்றியது என்றால் மிகையாகாது. கல்லூரியில் சிறந்த கணித, ஆங்கில ஆசிரியராகவும், கல்லூரிக்கு வெளியே ஓர் சமூக சேவையாளனாகவும், ஓர் அரசியற் போதனாசிரியராகவும், பார்வைக்கு எளிமையானவராகவும் விளங்கினார்.

கட்சியின் வேண்டுகோளின்படி யாழ்ப்பாணத் தொகுதிக்கு 1956இலும், நல்லூர் தொகுதியில் 1960இலும் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார். வாக்குரிமையற்ற மாணவர்களே இவரது கூட்டத்தில் ஏராளமாகக் கூடி நின்றனர். அறிவு செறிந்த, அரசியல் தத்துவத்துடன் கூடிய, ஹாஸ்யம் நிறைந்த இவரின் பேச்சுகளைக் கேட்கவே மாணவர்களும், வாலிபர்களும் இவரைச் சூழ்ந்து நின்றனர். யாழ்ப்பாணம் வந்த நாளிலிருந்தே துவிச்சக்கர வண்டியையே தனது நடமாட்டத்திற்குப் பாவித்ததினால் மக்களால் அவரை இலகுவில் அணுக முடிந்தது.

யாழ் இந்துக் கல்லூரியில் 1946 இலிருந்து 1971 மே மாதம் வரை சேவை செய்தார். இதில் 1971 ஜனவரி தொடக்கம் அவ்வாண்டு மே மாதம் வரை அதிபராகக் கடமையாற்றினார். குடாநாட்டிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்கு இவரைப் பேச்சாளராக அழைத்தனர். மாணவர் மன்றங்களில் விசேச சொற்பொழிவுகளுக்காக இவர் அழைக்கப்பட்டார். பிரபல்யமான பாடசாலைகளிலிருந்து வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு, உரை வழங்க வேண்டப்பட்டார். இது தொடர்பாகக் கல்லூரி மாணவர்கள் இவரைத் தேடி வருவது சாதாரண நிகழ்வாகும்.

யாழ் இந்துக் கல்லூரியில் இவர் கடமையாற்றிய காலமே பொற்காலம் எனலாம். சிறந்த அறிஞர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். யாழ் பல்கலைக்கழக வளாகம் ஆரம்பித்த போது தலைவராகவும், பின்னர் பல்கலைக்கழகம் பல மாடிக் கட்டிடமாகப் பரிணமித்த போது அதன் உபவேந்தராகவும் விளங்கிய கைலாசபதியும், தற்போதைய உபவேந்தராக விளங்கும் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இவரின் மாணவர்களேயாகும்.

1947ல் இலவசக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு 1976 யூன் 25ந் திகதி வரை, அதாவது கார்த்திகேசன் இளைப்பாறும் வரை, அவர் கல்விக்காக ஆற்றிய பங்கு அபரிமிதமானது. வண்ணார்பண்ணையில் வாழ்ந்த போது அவரின் வீடு காலையிலும் மாலையிலும் மாணவர்களின் வருகையால் நிறைந்திருக்கும். இவ்வாறு அவர் வீடு சென்றவர்களில் பலர் பின்னர் கட்சி உறப்பினர்களாகவும், அனுதாபிகளாகவும் மட்டுமின்றி, காத்தி அனுதாபிகளாகவும் மாறியுள்ளனர்.

1960களில் இயங்கிய வில்மட் பெரேரா தலைமையிலான தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் குழு மகஜர் ஒன்று சமர்ப்பித்தது. அந்த மகஜரின் உள்ளடக்கம் பின்னர் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மகஜருக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனேயாகும்.

யாழ் குடாநாட்டிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது இலவசக் கல்வி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாக இருந்தது. 1974ல் யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதும், அதன் தலைவராக தனது மாணவன் கைலாசபதி பொறுப்பேற்றது பற்றியும் அடிக்கடி பிரஸ்தாபித்து சந்தோசப்படுவது கார்த்திகேசனின் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வியிலுள்ள ஈடுபாட்டை எடுத்தியம்பியது. மேலும் யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கத்தின் உப தலைவராக விளங்கி, யாழ் பல்கலைக்கழக வளாகம் பல்கலைக்கழகமாக மாறவும், அது பரிபூரணமான சகல பீடங்களையும் உள்டக்க வேண்டுமென குடாநாடு முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார்.

இக்காலகட்டத்தில் அவர் இலங்கை தேசிய ஆசிரிய சங்கத்தின் (ஸ்ரீலங்கா ஜாதிக குரு சங்கமய) உப தலைவராகவும் செயற்பட்டார்.

1960 தொடக்கம் 1971 வரையிலான காலத்தில் ஆசிரியர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தார். இதற்காக ஆசிரியர் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியைப் பயன்படுத்தி 1960ல் இலங்கை அரசாங்கம் நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசாங்கமயப்படுத்த உதவினார். 1968ல் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கல்லூரிகளில் ஒன்றான சென்.ஜோன்ஸ் கல்லூரியிலிருந்து ஆசிரிய உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததிற்காக ஆர்.பானுதேவனும் வேறு சில ஆசிரியர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்ட போது, ஆசிரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளிலும் முன்னின்று உழைத்தார். மீண்டும் பானுதேவனுக்கு வேலை வழங்குமாறு மேல் நீதிமன்றம் 1976ல் உத்தரவு பிறப்பிக்கும்வரை, தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக்கும் பானுதேவனுக்கும் உறுதுணையாகவிருந்தார்.

அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்றதின் பிரகாரம், ஆசிரியர் தத்தமது அரசியல் உரிமைகளை இழந்தனர். கார்த்திகேசனுக்கு ‘M’ என்ற ஆங்கில எழுத்திலும் ‘K’ என்ற எழுத்திலும் அலாதி விருப்பம். தனது கட்சிப் பெயரை K.Maniccavasagar என மாற்றிக் கொண்டதுடன், எனக்கும் K.Muththusamy என்ற பெயரைச் சூட்டினார். 1963 முதல் 1965 வரை கார்த்திகேசன் அரசியல் வகுப்புகளை நடத்துவதில் மிகவும் அக்கறை காட்டி, வடக்கிலுள்ள எண்ணற்ற கிராமங்களுக்குச் சென்றார். இவருக்கு உதவியாக க.ஜனகா பணியில் இறங்கினார். இலங்கை வாலிபர் சங்க சம்மேளனத்தின் யாழ் மாநாட்டின் போதும், அதனைத் தொடர்ந்து 1964, 1965களிலும் கூடுதலான கட்சி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்தனர். கணிசமான உறுப்பினர்கள் வடமராட்சிப் பகுதியிலிருந்து வந்தனர். 1965ல் வடமராட்சி நெல்லண்டையில் கவிஞர் பசுபதி அரங்கில் நடைபெற்ற மார்க்சிசக் கல்விப் பட்டறையில் முக்கிய மார்க்சிசப் போதானாசிரியராக விளங்கிப் பல முன்னணித் தோழர்களை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈர்த்தவர் அவரே.

கார்த்திகேசன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியில் உதவி ஆசிரியராக இருந்த காலத்தோடு, 1971 ஜனவரி மாதம் அதிபராக நியமிக்கப்பட்டு, மே மாதம் வரை அங்கு கடமையாற்றிய பின்பு கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் அதிக நாள் கடமை புரியவில்லை. எவ்வாறு இருப்பினும் யாழ் இந்துக் கல்லூரியிலும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் அதிபராகச் சேவை புரிந்த காலத்தே அங்கள்ள ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் அன்புக்கும் மரியாதைக்கும் கட்டுண்டிருந்தார். 1972 ஜனவரி தொடக்கம் 1976 யூன் 25 வரை (அவரது பிறந்த நாள் யூன் 25) பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலே அதிபராகச் சேவை செய்த காலத்தே வட்டுக்கோட்டைப் பகுதியிலே பொதுமக்களின் அன்புக்குப் பாத்திரமானார். அப்பிரதேசத்திலே நடைபெற்ற சமூகப் பெருவிழாக்களிலே பேச்சாளராகப் பங்குபற்றியதோடல்லாமல், சமூக சேவையாளராகவும் மிளிர்ந்தார். கட்சி நடவடிக்கைகளும் இந்தக் காலகட்டத்தில் மந்த நிலையிலேயே இருந்தன. கார்த்திகேசனின் சேவையை மக்கள் தொடர்ந்தும் பெறுவதற்காகவே அவர் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலிருந்து இளைப்பாறியபோது, அவருக்கு பாடசாலை ஆசிரியர்கள் ஓர் தட்டச்சு இயந்திரத்தையும், துவிச்சக்கர வண்டியையும் அன்பளிப்புச் செய்ததுடன், கண்ணீர் மல்கிய பிரியாவிடையையும் வழங்கினர்.

கட்சியின் வளர்ச்சியும் பின்னடைவும்
1947 இலிருந்து 1963 வரை யாழ் குடாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு அரசியல், தொழிற்சங்க, சமூக முன்னேற்ற நடவடிக்கைகளின் மூலம் பலம் வாய்ந்த முதன்மையான இடதுசாரிக் கட்சியாக முன்னணிக்கு வந்தது. 1953 ஆகஸ்டில் நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹர்த்தால் இடதுசாரிகளின் சக்தியையும், பலத்தையும் நாட்டில் துல்லியமாகப் பிரகடனப்படுத்தியது. இந்தக் ஹர்த்தாலின் பிரதிபலப்பு 1956ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் வெளிப்பட்டது. காலஞ்சென்ற பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 1956ல் பருத்தித்துறை தொகுதிக்கு கட்சி சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு மட்டங்களில் கட்சியின் செயற்பாடுகளில் கார்த்திகேசன், வைத்திலிங்கம், பொன்.கந்தையா, எம்.சி.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, டாக்டர் சு.வே.சீனிவாசகம், இராமசாமி ஐயர், சுபைர் இளங்கீரன் போன்றோர் ஈடுபட்டு வந்தனர். கட்சியின் தலைமையில், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளனம், இலங்கை வாலிபர் சங்க சம்மேளனம், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை, பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், முற்போக்கு எழுத்தளர் சங்கம் போன்ற ஸ்தாபனங்கள் வெகுவீச்சுடன் இயங்கி வந்தன. இவற்றின் பின்னணியில் அச்சாணியாக விளங்கியவர் கார்த்திகேசனேயாவார்.

1960களில் இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி மாஸ்கோ சார்பு, பீக்கிங் சார்பு என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் காலத்துக்குக் காலம் கருத்து வேறுபாடுகள் தோன்ற, கட்சியின் பல முன்னோடி உறுப்பினர்கள் கார்த்திகேசன் உட்பட, வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். இந்நிகழ்வு கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு ஒரு பெரும் தாக்கமும் நஸ்டமுமாகும். இவற்றினால் கார்த்திகேசன் மிகவும் மனமுடைந்தேயிருந்தார். எவ்வாறிருப்பினும் அவர் இறக்கும் வரை பல்வேறு கட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தோருடன் தொடர்புகளை வைத்திருந்ததோடு, அவர்களின் சுகதுக்கங்களில் கலந்து கொள்வதை பழக்கமும் வழக்கமுமாகக் கொண்டிருந்தார். இவர்களில் அவருக்குப் பின்னர் காலஞ்சென்ற வீ.ஏ.கந்தசாமி, டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.டானியல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். வீ.ஏ.க்தசாமி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலெல்லாம், அவர் மீது அன்புகாட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பணிவிடை செய்வார். இவ்விருவருடன் நானும் கூடிச்செல்வது வழக்கம்.

கார்த்திகேசனும் நானும்
1952ல் நான் யாழ் மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் மெல்லிய, சுதேச உடையுடன் சால்வை அணிந்த ஒருவர் எமது பௌதீக ஆய்வுகூடத்தில் முற்போக்கு எண்ணங்கொண்ட ஏ.ஈ.தம்பர் ஆசிரியருடனும், கம்யூனிஸ்ட் அபிமானியான எஸ்.மகாலிங்கத்துடனும் அதிக நேரமிருந்து பேசிக்கொண்டிருந்தபோது, வகுப்பில் அமைதி குலைந்து சத்தமேற்பட்டது. பின்பு அந்த மனிதர் சென்றுவிட்டார். தம்பர் எம்மைக் கடிந்துவிட்டு ஆங்கிலத்தில் “உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர்தான் கார்த்திகேசன்” என்று கூறினார். அன்றுதான் நான் அவரை முதல் முறையாகப் பார்த்தது.

அந்த வகுப்பில் அவரது சகோதரி செல்வி முருகுப்பிள்ளையும் படித்தது எனது ஞாபகம். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் ஹர்த்தால் வெற்றிக் கூட்டத்தில் கார்த்திகேசனின் பேச்சுக்கு கைதட்டினேன். பின்பு ஒருமுறை நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அண்மையிலமைந்திருந்த இராமசாமி ஐயரின் புத்தகசாலையில் “மக்கள் கொரியாவுக்கு ஜே” என்றொரு புத்தகத்தை நான் வாங்கியபோது, என்னுடன் பேசினார். சில நிமிட நேரம் கதைத்துவிட்டு நான் கல்லூரி விடுதிக்குச் சென்றுவிட்டேன். அந்தக் காலத்தே மத்திய கல்லூரி விடுதிச்சாலை மாணவர்ளாகிய நாம் ஓர் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டோம். நாம் நடாத்திய வேலைநிறுத்தக் கூட்டத்தில் கார்த்திகேசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அன்று அவருடன் பேசும் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் 1956ல் பொன்.கந்தையா அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நெல்லியடிக்கு அடிக்கடி வருவார். அப்போதும் அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டு, நண்பர்களாகவும் தோழர்களாகவும் பரிணமித்துவிட்டோம். 1956க்குப் பின் காலஞ்சென்ற கரவைக் கந்தசாமியும் நானுமாக ஆரம்பித்த வடமராட்சி கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்துக்கு அடிக்கடி வருகை தந்து, அரசியல் வகுப்புகளை நடாத்தி, எண்ணற்ற வாலிபர்களை கம்யூனிஸ்ட் வாலிபர்களாக மாற்றி வெற்றி கண்டார். இவ்வாறு அவர் மீது எனக்கு ஏற்பட்ட பாசமும், நேசமும், தோழமையும் கலந்த நட்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்திருந்தது.

வருடத்தின் யூன் 25ம் திகதி எனக்கும் கார்த்திகேசனுக்கும் ஒரு சிறந்த நாள். மகிழ்ச்சியான நாள். அதுதான்அவரது பிறந்த நாள். எனது மகன் மகிந்தனின் பிறந்த நாளும்கூட. நான் நல்லூரில் வசித்த நாட்களில் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தந்து, தனது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ந்து, தனது நகைச்சுவை ததும்பும் பேச்சினால் அங்கு வந்த அனைவரையும், எனது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்துச் செல்வார். இந்தப் பசுமையான நினைவுகள் என் மனதைவிட்டு என்றும் அகலாதவை.

கார்த்திகேசன் மறைந்து 25 ஆண்டுகள் கழிந்திருக்கும் இவ்வேளையில் மார்க்சிசவாதிகளான எமக்கு அவரது வாழ்க்கை ஒரு முன்னோடி உதாரணமாகும். மார்க்சிச தத்துவம் என்றும் அழியாதது. மனிதகுலமிருக்கும் வரை நிலைத்திருக்கும். கார்த்திகேசன் மார்க்சிசத்திற்கு அளித்த பங்களிப்பு என்றும் இலங்கையிலுள்ள தற்தோதைய, வருங்காலத்தைய மார்க்சிஸ்டுகளால் நினைவுகூரப்படும்.

(தோழர் மு.குமாரசாமி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்டகாலச் செயற்பாட்டாளர் ஆவார். ஆசிரியராகப் பணிபுரிந்த அவர், ஆசிரிய தொழிற்சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவராவார். 2016இல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அவர் எழுதிய இக்கட்டுரை தோழர் கார்த்திகேசன் அவர்களின் மறைவின் 25ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது புதல்விகளில் ஒருவரான திருமதி ஜானகி பாலகிருஸ்ணன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என்ற நாலிலிருந்து நன்றியுடன் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

 

இதழ் 79-80-81, கட்டுரை 4

செப்ரெம்பர் 23, 2017

நக்ஸல் இயக்கத்தின்

தமிழகத் தூண்களில்

ஒருவரான கோவை ஈஸ்வரன்!

01.07.2017 இல் மறைந்த தோழர் கோவை ஈஸ்வரன்

அவர்களுக்கு ‘வானவில்’ தனது அஞ்சலியைச் செலுத்துகின்றது.

மிழகத்தின் செங்கொடி வரலாற்றில் வீரத்தால், தியாகத்தால் எழுதப்பட்ட பெயர்… அப்பு. அன்று அவரின் பெயரைக் கேட்டாலே ஆண்டைகள் அஞ்சி நடுங்குவார்கள். அவ்வளவு போர்க் குணம் கொண்ட போராளி. நக்ஸல்பாரிகளின் தியாகங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றை நேர்மையாக எவராலும் எழுத முடியாது. அப்பு, சீராளன், பாலன், இருட்டுப் பச்சை… போன்ற எண்ணற்ற பெயர்கள், இன்றைய தலைமுறை அறியாதவை; ஆனால், அறிந்து கொள்ள வேண்டியவை. இன்றைய தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கும் சரிபாதி உரிமைகளுக்காக, இதற்கு முந்தைய தலைமுறையிலேயே உயிர்விட்டவர்கள் இவர்கள்.

தமிழக நக்ஸல்பாரிகளின் பயணம், எங்கிருந்து தொடங்கியது, எப்போது தள்ளாடத் தொடங்கியது? கோவை ஈஸ்வரன், நக்ஸல்பாரி இயக்கத்தில் அனுபவம் மிக்க தோழர்; அப்பு, பாலன் ஆகியோரோடு பழகியவர். ஆயுத வழி அரசியலில் முரண்பட்டு விலகியிருந்தாலும், இன்று வரை மாவோயிஸ்ட்களின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஆதரவாளர். சென்னையில் வசிக்கும் ஈஸ்வரன், ரத்தம் படிந்த அந்தச் சிவப்பு நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

”கோபிசெட்டிபாளையம்தான் என் சொந்த ஊர். ‘பிராமணர்கள், கடல் கடந்து போகக் கூடாது; சிறை செல்லக் கூடாது’ போன்ற கடும் கோட்பாடுகளைக் கொண்ட பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா ஜி.வி.வெங்கட்நாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர். 1921-ம் ஆண்டிலேயே ஒரு வருடம் சிறைக்குச் சென்று வந்ததால், எங்கள் குடும்பத்தை சாதிப் புறக்கணிப்பு (சாதிப் பிரஷ்டம்) செய்தனர். சாதி மீது இருந்த பற்றை விட, நாட்டின் விடுதலை மீது இருந்த பற்று அதிகம். சுதந்திரப் போராட்டங்கள் பலவற்றில் பங்குபெற்றார். நாடு விடுதலை அடைந்த அடுத்த வருடமே, உடல் சுகவீனமடைந்து இறந்துட்டார்.

அப்புறம் நான் சொந்த ஊரைவிட்டு வெளியேறி, சென்னை மேற்கு மாம்பலத்தில் மாமா வீட்டில் தங்கிப் படிச்சேன். பள்ளி மாணவனா இருந்தப்போ, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தில் இணைந்தேன். 1956-ம் ஆண்டில் நடந்த தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டம் தொடங்கி, மொழிக்காக நடந்த எல்லா போராட்டங்களிலும் இணைந்தேன். அப்புறம் மார்க்சியத்தில் ஈடுபாடு வந்து, அரசியல் ரீதியாகச் செயல்பட ஆரம்பிச்சோம். போராட்டம், சிறைவாசம் எல்லாம் சேர்ந்து படிப்பை என்னிடம் இருந்து பறிக்க, முழு அரசியல் வாழ்க்கைக்கு வந்தேன். அப்போ கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த ஜீவா, பாலதண்டாயுதம் போன்றோருடைய தொடர்பு இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம். அதன் பிறகு மார்க்சிஸ்ட்டுகளுடன் முரண்பட்டு, நக்ஸல்பாரி இயக்கம் உருவானபோது அதன் தமிழக கிளையில் நான், அப்பு, பாலன்… போன்றோர் உறுப்பினர்கள் ஆனோம். இங்கே நக்ஸல்பாரி கிளர்ச்சியைப் பற்றி சொல்லிடுறேன். 1967-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில் விவசாய எழுச்சி உருவானது. அதை சாரு மஜூம்தார் உள்ளிட்ட பல தோழர்கள் முன்னெடுத்தார்கள். மேற்கு வங்கம் நக்ஸல்பாரி கிராமத்தில் உருவான அந்தக் கிளர்ச்சி, இந்தியா முழுக்கப் பரவியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சி தொடங்கப்பட்ட புதிதில் நகரம் – கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், வெகுசன மக்களைத் திரட்டி நாங்கள் பணி செய்தோம். முதலில் ‘ஒருங்கிணைப்புக் குழு’ என்றுதான் செயல்பட்டோம். அதன் இந்திய அளவிலான பொதுச் செயலாளராக சாரு மஜூம்தாரும், தமிழக ஒருங்கிணைப்பாளராக தோழர் அப்புவும் இருந்தனர்.

1969-ம் ஆண்டில் முறைப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயருடன் செயல்பட்டோம். எங்களுக்கு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பிலும் செல்வாக்கு கிடைத்தது. ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் குசேலர், கோதண்டராமன் போன்றோர் தலைமையில் கட்சி பலமாக இருந்தது. பெண்ணாடத்தில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான தோழர்கள் பிரமிக்கத்தக்க வகையில் கட்சியை வளர்த்தனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.

கூட்டாளி

1969-ம் ஆண்டுக்கு பிறகு, சாரு மஜூம்தார் ‘வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம்’ என அறிவித்தார். மக்களுடன் நாங்கள் கொண்டிருந்த உறவை அப்படியே கைவிட்டுவிட்டு, தலைமறைவு இயக்கம் ஆனோம். ‘கொடுமை செய்யும் நிலப்பிரபுகள், கந்துவட்டிக்காரர்கள், ஏழை மக்களை அடிமைகளாகத் துன்புறுத்துவோரைக் கொல்வதன் மூலம் வர்க்க விடுதலையை அடையலாம்’ என்பது அழித்தொழிப்பு அரசியல். ‘நீரை ஆதாரமாகக் கொண்ட மீனைப் போல, மக்களை ஆதாரமாகக் கொண்டு புரட்சியாளர்கள் இருக்க வேண்டும்’ என்றார் மாவோ. ஆனால், நாங்கள் மக்களிடம் இருந்து அந்நியமாகிவிட்டோம். அன்றைக்கு இந்த அழித்தொழிப்புக் கொள்கையை என் போன்றோர் ஏற்கவில்லை. ஆனால் அழித்தொழிப்பு வழிமுறை தவறு என்றால், அதற்கு மாற்றாக இன்னொரு வழிமுறையைச் தோழர்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தப் பக்குவம் அன்று எங்களிடையே இல்லை. எனவே, விரும்பியோ விரும்பாமலோ அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் தோழர்கள் ஈடுபட்டார்கள். தமிழகம் முழுக்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலைமறைவு ஆனார்கள். அப்போது அகில இந்திய அளவில் கட்சி ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற புதிய கிளர்ச்சியை அறிவித்தது. நிலச்சுவான்தார்களின் விளைந்துகிடக்கும் நிலங்களில் புகுந்து, நெல்லை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுதான் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ கிளர்ச்சி. பெண்ணாடம், தஞ்சைப் பகுதிகளில் கலிய பெருமாள் உள்பட பல தோழர்கள் இதைச் செய்தார்கள். அப்போது கடுமையான காவல் துறையினர் தொல்லை இருந்தது. ‘காவல் துறையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் வேண்டும்’ எனத் தீர்மானித்தவர்கள், தோட்டத்தில் வைத்து நாட்டு வெடிகுண்டு செய்ய முயற்சித்தனர். அது தவறுதலாக வெடித்து, மூன்று தோழர்கள் உயிர் இழந்தார்கள். புலவர் கலியபெருமாள் காயங்களோடு தப்பினார். தமிழகம் முழுக்க நடைபெற்ற அழித்தொழிப்பு நடவடிக்கையில், 20-ல் இருந்து 25 நிலபிரபுகள் வரை கொல்லப்பட்டனர்.

ஒரு இடத்தில் வர்க்க எதிரி அழிக்கப்படும்போது, மக்கள் அதைத் தற்காலிகமாகக் கொண்டாடுவார்கள். அதன் பின்னர் காவல் துறையினர் வந்து மக்களைத் துன்புறுத்த ஆரம்பிக்கும். நக்ஸல்பாரி தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்தவர்கள், சாப்பாடு போட்டவர்கள் என அத்தனை பேரையும் சித்ரவதை செய்தது காவல் துறை. இதனால் நாங்கள் மீண்டும் அந்த மக்களிடம் செல்ல முடியவில்லை. காவல் துறையிக்குப் பயந்து மக்களும் எங்களிடம் இருந்து அந்நியப்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் காவல் துறையின் கண்காணிப்பும் நெருக்குதலும் அதிகரித்தன.

அதே காலகட்டத்தில் திருப்பத்தூரில் சில தோழர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களை ஜீப்பில் வைத்து அழைத்துச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில், ஐந்து பேர் மரணமடைந்தனர். இதுவும் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்க, நக்ஸல்பாரிகள் மீதான வேட்டை தொடங்கியது. நாங்கள் வேட்டையாடப்பட்டோம்’ என இடைவெளி விடும் கோவை ஈஸ்வரன், சிறிய மௌனத்துக்குப் பிறகு பேச ஆரம்பிக்கிறார்.

”நக்ஸல்பாரிகள் மீதான அழித்தொழிப்பின் முதல் பலியே எங்கள் தோழர் அப்புதான். அவர், கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தவர். அடிப்படையில் கல்வி அறிவற்ற அவர், தானாகப் படித்து ஆங்கிலமும் கற்று ஏழைகளுக்குக் கல்வி புகட்டினார். சாதி வெறியர்களுக்கு எதிராகவும், கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியதால், அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது. நக்ஸல்பாரி அமைப்புக்கு வந்த பிறகு அழித்தொழிப்பு நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டதற்காக, அவரை காவல் துறையினர் தேடியது. 1970-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற இருந்த கட்சியின் மையக் குழுக் கூட்டத்துக்குச் செல்ல வேறு ஒரு பெயரில் ரயில் பயணச்சீட்டு எடுத்துவிட்டு, தான் தங்கியிருந்த வேலூர் விடுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு காவல் துறை உளவாளி ‘அவர்தான் அப்பு’ என்பதை உறுதிசெய்து, காவல் துறைக்குத் தகவல் சொல்லிவிட்டார். விடுதி அறையில் இருந்த அப்புவை போலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் தோழர் அப்புவின் உடலை இன்று வரை எவருமே பார்க்கவில்லை. அன்றில் இருந்து இப்போது வரை, அவர் அரசு ஆவணங்களில் தேடப்படும் குற்றவாளிதான்.

அப்புவுக்கு அடுத்து சீராளன் என்னும் தோழரை அடித்தே கொன்றார்கள். சீலையம்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனை அழைத்துச் சென்றவர்கள், அவரை அடித்து முக்கால் பிணமாக்கி அரசு மருத்துவமனையில் சேர்த்த பின், அவர் அங்கு இறக்கிறார். அதன் பின்னர் போலீஸார் அவருடைய சாம்பலைத்தான் கொடுத்தார்கள்.

தேவாரம் தலைமையிலான காவல் துறை நடத்திய வேட்டையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட நக்ஸல்பாரி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கத்தில் சாரு மஜூம்தாரும் கொல்லப்பட, எங்கள் இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. 1975-க்குப் பிறகு, கட்சி மூன்றாகப் பிளவுபட்டது. அந்தப் பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், புதிய அரசியல் பாணியில் இன்றும் மக்களோடு பயணிக்கிறார்கள்.

அப்பு காணாமல் போனது தொடர்பாக, காதர் கமிஷனை அப்போது அமைத்தது தமிழக அரசு. ஆனால், காவல் துறைக்குப் பயந்து எவரும் சாட்சியம் சொல்ல முன்வரவில்லை. அப்பு காணாமல் போனவராகவே, காதர் கமிஷனால் அறிவிக்கப்பட்டார். சீராளன் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டதில், சீராளனை காவல் துறை கொன்றது உறுதியானது. இதனால், சீராளன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

1970-ம் ஆண்டுக்குப் பிறகு கூட, ரவீந்திரன், சிவா என்கிற பார்த்திபன், நவீன் பிரசாத் என, தோழர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். அந்தக் காலத்தில் அமைப்பில் இருந்து செயல்பட்டவர்கள் இன்றும் வழக்கு, வாய்தா என அலைகிறார்கள். சாரு மஜூம்தாரை அழித்துவிட்டால் நக்ஸல்பாரி இயக்கம் அழிந்துவிடும் என்றார்கள். ஆனால், இன்றும் மத்திய இந்தியாவின் காடுகளில் பரந்து விரிந்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தை, ‘சிவப்புத் தாழ்வாரம்’ என அடையாளப்படுத்துகிறார்கள்.

பல முரண்பாடுகள் இருந்தாலும், முதலில் அப்பு-பாலனுக்கு செவ்வணக்கம் சொல்லிவிட்டுத்தான், தன் (கம்யூனிஸ்ட்) கட்சி வேலைகள் தொடங்கப்படுகின்றன. ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அன்று ‘துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்ற மாவோவின் கோட்பாட்டை முன்வைத்தோம். இன்று ‘மக்கள் திரள் போராட்டங்கள் மூலமே புரட்சியைச் சாதிக்க முடியும்’ என நம்புகிறோம். 70-களில் நாம் பார்த்த கிராமங்களுக்கும் இன்றைய கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பெரிய நில உடைமையாளர்களே சுயமாக விவசாயம் செய்ய முடியவில்லை. நிலம், மக்களிடம் இருந்து அந்நியமாகிவிட்டது. முன்னர் விதர்பாவில் மட்டுமே நடந்த விவசாயிகள் தற்கொலை, இப்போது நாடு முழுக்க விரிவடைந்திருக்கிறது. ‘தற்கொலைக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டாம்’ என்பதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்புவதின் நோக்கமும் இதுதான்.

தமிழகத்துக்கே உணவு அளித்த தஞ்சையில் கூட, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இன்னொரு பக்கம், கிராமப்புற மக்களை கூலி அடிமைகளைப் போல நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பன்னாட்டு மூலதனக் குவிப்பாலும், அதன் தொழில் முறைகளாலும் புதிய மத்திய தரவர்க்கம் ஒன்று உருவாகியிருக்கும் அதே வேளையில், ஏழ்மையும் வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ‘இந்த மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்கள் யார்?’ என்பதே இப்போதுள்ள கேள்வி. இந்தக் கேள்விகளில் இருந்துதான் அதற்கான பதிலும் கிடைக்கிறது. அந்தப் பதிலில் நாங்கள் ஒரு சிறு துளியாக இருப்போம்!”

(2015ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை)

இதழ் 79-80-81, கட்டுரை 3

செப்ரெம்பர் 23, 2017

யானை பார்த்த குருடர்கள்!

-பச்சிலைப்பள்ளியான்

ண்மையில் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைக்கு அருகிலிருக்கும் வத்திராயன் பகுதியில் காட்டு யானை தாக்கி 50 வயது குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். அவருடன் கூடச் சென்ற இருவர் யானையால் தாக்குண்டு பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த மூவரும் விறகு பொறுக்கச் சென்ற வேளையிலேயே எதிர்பாராத விதமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் யானைகள் எதுவும் கிடையாது. இந்த யானை வழி தவறி விசுவமடு காட்டுப் பகுதியிலிருந்து வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மாரி காலத்தில் பெய்யும் கனமழை காரணமாக ஆனையிறவு வரை நீண்டிருக்கும் யாழ்ப்பாணக் கடலேரி ஆனையிறவுக்குக் கிழக்கே உள்ள சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பெருங்கடலுடன் தொடுத்துவிடும். அந்த நேரத்தில் மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி, ஏரியைக் கடந்து வடமராட்சி கிழக்கு வரை நீண்டிருக்கும் யாழ்.குடாநாட்டுக்குள் வர முடியாது.

ஆனால் மாரி முடிந்து கோடை ஆரம்பமாகி, கோடை மழையும் பொய்த்து, கடும் வரட்சி ஏற்படும் ஆனி, ஆவணி மாதங்களில் யாழ்.கடலேரி வற்றி பெருங்கடலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு, கடலேரி பின்வாங்கிவிடும். அந்த நேரத்தில் கடலேரிக்கும் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய பிரதேசம் மணல் நிறைந்து காணப்படும்.

“பூனைத்தொடுவாய்” என்று அழைக்கப்படும் அந்த இடத்தால் மனிதர்கள் நடந்து செல்வது வழமை. அதுமட்டுமல்லாமல், முன்னைய காலங்களில் வன்னியிலிருந்து களவாக மரங்கள் தறித்து வருபவர்கள் ஆனையிறவுத் தடை முகாமில் காவல் இருக்கும் பொலிசாரினதும் காட்டிலாகா அதிகாரிகளினதும் பிடியிலிருந்து தப்புவதற்காக இந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் யாழ்.குடாநாட்டுக்குள் கள்ள மரங்கiயும் விறகையும் கொண்டு வருவது வழமை.

அதுமாத்திரமின்றி, வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல்காரர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், இந்தப் பாதையின் ஊடாகவே இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் அபினையும், புடவை வகைகளையும் தென்னிலங்கைக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்வது வழமை. இதற்காகவே அவர்கள் இயக்கச்சியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏராளமான காணிகளை வாங்கி தென்னம் தோட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தத் தென்னம் தோட்டங்கள் நீண்டகாலம் கடத்தல்காரர்களின் தங்குமடங்களாகப் பயன்பட்டு வந்தன.

தற்பொழுது இந்தப் பிரதேசத்தில் மழை பெய்யாமல் கடும் வரட்சி நிலவுவதால், அந்தப் பூனைத் தொடுவாய் மூலம் இந்தக் காட்டு யானை வழி தவறி வந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறு நிறைய உண்டு. ஆனால், எதேச்சையாக நடந்த இந்தச் சம்பவம் புலிகளின் புகழ்பாடும் ‘தமிழ் நெற்’ (tamilnet.com) றின் காமாலைக் கண்களுக்கு வேறு விதமாகப் பட்டிருக்கிறது. எடுத்ததிற்கெல்லாம் சிங்கள எதிர்ப்பு இனவாதம் கக்கும் இந்த இணையத்தளம், இந்த காட்டு யானையால் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு விசமத்தனமான கதையொன்றைச் சோடித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, 2009இல் புலிகளுடனான போர் முடிவடைவதற்கு முன்பு தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் யாiனைகள் இல்லையென்றும், போர் முடிவடைந்து அப்பிரதேசங்கள் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் ‘சிங்கள அரசாங்கம்’ தமிழர்களை அழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் தென்னிலங்கையிலிருந்து யானைகளை வடக்கு கிழக்கிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்றும், அந்த யானைகள் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன எனவும், ‘தமிழ் நெற்’ அப்பட்டமான புளுகுக் கதையொன்றை அவிழ்த்து விட்டுள்ளது.

யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் யானைகள் இருந்தனவா இல்லையா என நாம் இங்கு விவாதிக்க முற்படவில்லை. ஏனெனில் அது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம். அதைப்போய் இங்கு விவாதிப்பது நகைப்புக்கிடமானது.

ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்கள் சிலரும் ஆலோசகர்களாக இருந்து வெளியிடப்படுவதாகக் கூறப்படும் ‘தமிழ் நெற்’ இணையத்தளத்தில் இப்படியான ‘அம்புலிமாமா’ கதைகளை எழுதுவது முழுத் தமிழ் சமுதாயத்துக்கும் வெட்கக்கேடானது. ‘எப்படியேனும், எந்த வகையிலேனும், சிங்களவனை அடிச்சால் காணும்’ என்ற நினைப்பில் எழுதப்படும் இந்த வகையான கோணங்கித்தனமான எழுத்துக்களால் சிங்கள மக்களோ, ஏன் சிங்கள இனவாதிகளோ கூட பாதிக்கப்படப் போவதில்லை. தமிழ் மக்களுக்கத்தான் மேலும் மேலும் இழப்புகள் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட ஞானசூனியங்கள் புரிந்து கொண்டால் சரி.

 

இதழ் 79-80-81, கட்டுரை 2

செப்ரெம்பர் 23, 2017

த.தே.கூ, ஜே.வி.பி. உதவியுடன்

அரச ஊழியர்களின்

ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது

‘நல்லாட்சி’ அரசு!

ள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசில் அங்கம் வகிக்காது அதேநேரத்தில் அரசுக்கு முண்டு கொடுத்து வரும் போலி எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரசை விமர்சிப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு அரசை மறைமுகமாக ஆதரித்து வரும் இன்னொரு கட்சியான ஜே.வி.பியும் இந்தச் சட்ட மூலத்தை ஆதிரித்து வாக்களித்துள்ளன. அதுமாத்திரமின்றி, இந்தச் சட்டமூலத்தை ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க வானளாவப் புகழ்ந்தும் உள்ளார். (த.தே.கூ. சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு, அதன் தலைவர் சம்பந்தன் அதை மறைப்பதற்காக கபடத்தனமாக அரச ஊழியர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க்கூடாது என அறிக்கையும் விடுகின்றார்)

அதேநேரத்தில் அவசரம் அவசரமாகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமூலத்தைப் படித்துப் பார்க்கப் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தாலும், இந்தச் சட்டமூலத்தில் பல ஜனநாயக விரோத அம்சங்கள் உள்ளதாகக் கருதுவதாலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்தச் சட்டத் திருத்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளது.

பல உள்ள+ராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தும் அரசாங்கம் தோல்விப் பயம் காரணமாக ஒன்றரை வருடங்களாக அவற்றின் தேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்து வருகின்றது. விரைவில் காலம் முடிவடைய இருக்கும் வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணசபைகளின் தேர்தல்களையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ‘நல்லாட்சி’ அரசின் பங்காளிக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், அமைச்சர் மனோ கணேசனின் கட்சியும் அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், ஐ.தே.க. தலைமையிலான அரசு தன் திட்டத்தில் விடாப்பிடியாக நிற்கிறது.

இந்த ள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தில் உள்ள இன்னொரு ஜனநாயக விரோத அம்சம் என்னவெனில், தற்போது நடைமுறையில் இருப்பது போல அரசாங்க ஊழியர்கள் வருங்காலத்தில் தொழிலில் இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது. அவர்கள் தேர்தலில் ஈடுபடுவது என்றால், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே பதவியில் இருந்து விலகிவிட வேண்டும். இந்த ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், “இந்தத் திருத்தச் சட்டம் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால், இதை ஆதரித்து வாக்களிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனநாயக விரோதச் சட்டத் திருத்தம் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, “இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, அரச ஊழியர்கள் மத்தியிலும் நாளுக்குநாள் எதிர்ப்பு வளர்ந்து வருவதால், அவர்களைத் தேர்தல்களில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கே அரசு இவ்வாறான ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட அரசு தடை விதித்தால், அவர்களுக்குப் பதிலாக அவர்களது வாழ்க்கைத் துணைவர்களை தேர்தலில் போட்டியிட வைப்போம்” எனக் கூறியிருக்கிறார்.

இதழ் 79-80-81, கட்டுரை 1

செப்ரெம்பர் 23, 2017

இவர்கள் எப்போதுதான்…..

-தோழர் மணியம்

ண்மையில் ஒரு வைபவத்தில் பேசிய போலி எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தேவை ஏற்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தன்னும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தான் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

சம்பந்தனின் இந்தக் கூற்று அரசியல் நெளிவு சுழிவுகளை விளங்கிக் கொள்ளாத சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அவர்களில் எல்லாம் தெரிந்தவர்களாகக் காட்டிக் கொண்டு ஊடகங்களில் அரசியல் பத்திகள் எழுதும் சிலரும் அடங்குவர். ஆனால் இந்தப் பிற்போக்குத் தமிழ் கட்சி தலைவர்களின், அதிலும் சம்பந்தனின் அரசியல் தில்லுமுல்லுகளையும், குள்ளத்தனங்களையும் புரிந்து கொண்டவர்களுக்கு சம்பந்தனின் இந்தப் பேச்சு ஆச்சரியம் எதனையும் அளித்திருக்காது.

ஏனெனில், இதே சம்பந்தனும் அவரது சகாக்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரும்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும், தமிழ் மக்களினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும் அபிப்பிராயங்களைப் புறக்கணித்துவிட்டு, எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர்கள்.

அதுமாத்திரமின்றி, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படமாட்டாது, ஒற்றையாட்சியே தொடரப்படும் என ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் பல தடவைகள் வலியுறுத்திச் சொன்ன போதிலும், அவர்கள் இருவரும் நிச்சயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என திரும்பத் திரும்ப அடித்துச் சொன்னவர்களும் இந்தச் சம்பந்தனும் அவரது சகாக்களும்தான்.

அண்மையில் கூட, ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற அரசியல் பிரவேசத்தின் 40ஆவது ஆண்டுப் பூர்த்தி கொண்டாடப்பட்ட போது, சம்பந்தன் ரணிலின் ‘சேவையை’ வானளாவப் புகழ்ந்து தள்ளினார். நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில் மட்டுமின்றி, அதற்கு அப்பாலும் சென்று ரணில் நாட்டுக்கு ஆற்றிய ‘சேவை’களையும், அவரது தனிப்பட்ட திறமைகளையும் சம்பந்தன் புகழோபுகழ் என்று புகழ்ந்து தள்ளினார்.

அவரது புகழ்ச்சியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் தான் போட்டியிடப் போவதாக அடம் பிடிக்காமல் மகிந்தவின் சர்வாதிகார அரசைத் தோற்கடிப்பதற்காக மைத்திரியை பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டார் என்பதுதான்.

இவ்வாறு கனவிலும் நினைவிலும் ஐக்கிய தேசிய கட்சியை ஆராதிக்கும் சம்பந்தன், மகிந்தவுடன் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போகிறேன் என்றால், அதை நம்புவதற்கு மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல என்பதே உண்மை. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முழுவதும் இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாகப் பேசுவதற்கு அழைத்த போதெல்லாம் தட்டிக்கழித்ததுடன், அரசை வசை பாடுவதிலேயே காலத்தைச் செலவழித்த சம்பந்தன் கோஸ்டி, இப்பொழுது மட்டும் மகிந்தவுடன் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போவதாகச் சொல்வது, இவர்களது வழமையான மக்களை ஏமாற்றும் புருடாக்களில் ஒன்று.

உண்மை என்னவென்றால், மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக உருப்படியான எதையும் செய்யாது என்பது சகலருக்கும் தெட்டத்தெளிவாகிவிட்ட நிலையில், அதைச் சமாளிப்பதற்காக ‘அவலை நினைத்து உரலை இடிப்பது’ போல, யாரையோ மிரட்டுவதற்காக மகிந்தவுடன் சேரப்போவது போன்று பாவ்லாக் காட்டுகிறார் சம்பந்தன்.

இது ஒருபுறமிருக்க, ஊழல் மோசடி காரணமாக முன்னர் நிதியமைச்சராகவும், பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்து, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் நிர்ப்பந்தம காரணமாக பதவி விலகிய ஐ.தே.கவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ரவி கருணநாயக்கவின் விடயத்திலும் சம்பந்தன் தனது வண்டவாளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சம்பந்தனின் கண்களுக்கு ரவி கருணநாயக்க ஊழல் மோசடிக்காரராகத் தெரியவில்லை. மாறாக குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் பதவி விலகியபடியால், முன்னுதாரண புருசராகத் தெரிகிறார். அப்படியானால் சம்பந்தனின் புகழ்ச்சியின்படி இனி எல்லோருக்கும் ரவி கருணநாயக்கதான் ஆதர்சபுருசர்.

ரவி கருணநாயக்கவை புகழும் சம்பந்தன், தனது கட்சியால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபையில் நாற்றமெடுக்கும் ஊழல்கள் மோசடிகள் பற்றி மட்டும் கள்ளத்தனமான மௌனம் சாதிக்கிறார். அதேபோல, தனது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்தின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றியோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி வீ.ஆனந்தசங்கரி போன்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றியோ வாய் திறக்காமல் மௌன விரதம் அனுட்டிக்கிறார்.

சம்பந்தன் போன்ற ‘கதாநாயகர்கள்’ பற்றிப் பேசும் போது, கதாநாயகர்களுக்கு அடுத்த முக்கியத்துவம் உள்ள நகைச்சவை நடிகர்களைப் பற்றியும் பேசாவிட்டால், அந்தப் பேச்சு பூரணத்துவம் பெறாது.

நாடு முழுவதும் கொழும்பில் செயற்படும் ‘சைற்றம்’ எனப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டு இருக்கிறது. இலவசக் கல்வியைப் படிப்படியாக அரித்துத் தின்பதற்கான ஒரு வெள்ளோட்டமாக ஆரம்பிக்கப்பட்ட அக்கல்லூரியை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களினதும், நாட்டு மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாகும். இந்தப் போராட்டத்தில் இன, மத, பிரதேச வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லப்போனால், 1953இல் அப்போதைய ஐ.தே.க. அரசுக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் கிளர்ந்து எழுந்து போராடியதற்குப் பின்னர,; இந்த சைற்றத்துக்கு எதிரான போராட்டமே நாடு தழுவிய போராட்டம் எனலாம்.

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ் அரசியல் கோமாளிகளில் ஒருவரான எம்.கே.சிவாஜிலிங்கம் என்பவர், ‘நாட்டுக்கு சைற்றம் போல 10 சைற்றங்கள் தேவை’ என அண்மையில் பொன்னான கருத்தொன்றை உதிர்த்திருக்கிறார். இப்படியானவர்களை போய் என்னவென்று சொல்வது? நாடு முழுவதும் ஒரு திசையில் பயணிக்க இவர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் ஒரு எதிர் ஓட்டம் ஓடும் போக்கே தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு எழுதாத விதியாக இருந்து வருகிறது.

உலகினதும் நமது நாட்டினதும் பொதுவான அரசியல் ஓட்டத்துக்கு எதிராகவே எப்பொழுதும் தமிழ் தலைமைகள் இருந்து வருவதை ஒப்பிடுவதுற்கு காலஞ்சென்ற தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் சொன்ன ஒரு ஒப்பீடுதான் இதை நினைக்க ஞாபகத்துக்கு வருகிறது.

அதாவது, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ‘யாழ்தேவி’ புகையிரதத்தில் ஏறி இருக்கும் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்ஜே.வி. செல்வநாயகம், தான் காங்கேசன்துறை செல்வதாகக் கூறிக்கொண்டு, முன் பெட்டியிலிருந்து பின் பெட்டி நோக்கி நடப்பது போன்றதுதான் தமிழ் அரசியல் தலைமையின் போக்கு என தோழர் கார்த்திகேசன் நகைச்சுவையாகக் கூறுவார். அவரது ஒப்பீடு இன்றைய தமிழ் தலைமைக்கும் அச்சொட்டாகப் பொருந்தக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை.

 

வானவில் இதழ் 78

ஜூலை 2, 2017

அழுகி முடைநாற்றம் எடுக்கும்

பிற்போக்குத் தமிழ் தலைமையை

மக்கள் தூக்கி எறிய வேண்டும்!

லங்கைத் தமிழர்களின் அரசியல் மீண்டும் ஒருமுறை நாறிப்போயிருக்கிறது.

இந்தமுறை அது வடக்கு மாகாணசபை வடிவத்தில் வந்திருக்கிறது. ஆனால் இப்படியான நிலைமைகள் ஏற்பட்டது இதுதான் முதல் சம்பவமும் அல்ல.

இதை நாம் திரும்பத் திரும்ப எழுதுவதால் இது உடனடியாக நின்று போகப்போவதும் இல்லை.

இருப்பினும் நாம் எமது கடமையைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
முதலில் ஒன்றைக் கூறிவிட வேண்டும்.

1948இல் பிரித்தானியாவிடம் இருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் சரி, அதிலிருந்து பிரிந்து உருவான தமிழரசுக் கட்சியும் சரி, அதன் பின்னர் அந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, பின்னர் அவர்களது போக்கில் அதிருப்தியுற்று ஆனால் அவர்களின் வழித்தோன்றல்களாக பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி, அன்றிலிருந்து இன்றுவரை ஒரே பாதையியிலேயே பயணித்து வருகின்றன. ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், ஆரம்பகாலத் தலைமைகள் அகிம்சை பேசின, பின்னர் வந்த தலைமைகள் ஆயுதப் போராட்டம் செய்தன. வழிமுறையில் வித்தியாசமேயொழிய கொள்கைகளில் எவ்வித வித்தியாசமும் இருக்கவில்லை.

அன்றிலிருந்து இன்றுவரையான தமிழ் தலைமைகளின் அரசியல் நிலைப்பாட்டை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இன மற்றும் சமூகரீதியிலான நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், வட பகுதி நிலப்பிரத்துவ அடிப்படையிலான, சாதிப்பாகுபாடு கொண்ட, யாழ்.மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மேட்டுக்குழாமின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.

தேசியரீதியான நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், ஏகாதிபத்திய சார்பு, தரகு முதலாளித்துவ, சிங்கள இனவாத பிற்போக்கு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ச்சியாக அரசியல் உறவையும், ஒருமைப்பாட்டையும் பேணி வருதல்.

சர்வதேச அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, மேற்கத்தைய எகாதிபத்திய சக்திகளுடனும், இந்திய பிராந்திய மேலாதிக்க விஸ்தரிப்புவாத சக்திகளுடனும் கூட்டுச் சேர்ந்து அவற்றின் ஆதரவாளர்களாகவும் கையாட்களாகவும் செயற்படுதல்.

இந்த மூன்று நிலைப்பாடுகளையும் பொறுத்தவரையில், ஆரம்பகால அகிம்சை ரீதியிலான தமிழ் தலைமைகளுக்கும், பின்னர் உருவான ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. சிறு வித்தியாசம் என்னவெனில், சில ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவின் கையாட்களாகச் செயற்பட்டுக் கொண்டு, அப்போதைய இந்திராகாந்தியின் இந்தியாவுக்கு எதிரான மேற்கத்தை ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக இருந்தன. விடுதலைப் புலிகள் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளைச் சார்ந்து நின்று கொண்டு இந்தியாவை எதிர்த்தனர்.

இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்னணியில், மீண்டும் தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் எதிரும் புதிருமான இரு அணிகள் என்ற ஒரு தோற்றப்பாடு உருவாகியுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக இரண்டு அணிகள் உருவாகியுள்ளனவா என்பது கேள்விக்குரியது.

இன்று சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரால் தலைமை தாங்கப்படும் தமிழரசுக் கட்சிக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் தலைமைதாங்கப்படும் தீவிர தமிழ் தேசியவாதிகள் போல் தோற்றமளிக்கும் அணியினருக்கும் இடையிலான முரண்பாட்டை வைத்துக்கொண்டு, தமிழ் அரசியல் அரங்கில் எதிரும் புதிருமான இரண்டு அணிகள் உருவாகியுள்ளதாகச் சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழரின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் எதிரும் புதிருமான அரசியல் அணிகள் இருந்திருக்கின்றன. தமிழர்களின் மூத்த அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் சுமார் 27 வருட காலம் போட்டி அரசியல் நிலவியது. தமிழ் மக்களின் நலன்களுக்காக இரண்டு கட்சிகளையும் ஒன்றுபட்டுச் செயற்படுமாறு மக்கள் தரப்பிலிருந்து விடுக்கபட்ட கோரிக்கைளை இரு தரப்பினருமே ஏற்றுக்கொள்ளாமல் கீரியும் பாம்புமாகச் செயற்பட்டு வந்தனர். ஆனால் 1970 பொதுத்தேர்தலில் இரண்டு கட்சிகளினதும் முக்கிய தலைவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டபோது, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றவும், இரண்டு கட்சியினரும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், தாங்கள் அதுவரை காலமும் பின்பற்றிய வங்குரோத்துத்தனமான அரசியல் கொள்கைகளை மறைக்க “தமிழீழம்” என்ற இன்னொரு வங்குரோத்துத்தனமான கொள்கையையும் முன்வைத்தனர்.

அதுபோன்றதொரு நிலைமைதான் இப்பொழுது சம்பந்தன் குழுவினருக்கும், விக்னேஸ்வரன் குழுவினருக்கும் இடையில் உருவாகியுள்ளது. விக்னேஸ்வரன் இப்பொழுது பேசுகின்ற அதிதீவிரத் தமிழ் தேசியவாதம், முன்னைய மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சம்பந்தன் குழுவினரால் தீவிரமாகப் பேசப்பட்ட ஒன்றுதான். மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அவர்களுக்குப் பிடிக்காததால், அவர்கள் அப்பொழுது அப்படிப் பேசினார்கள். பின்னர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஐ.தே.க. தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் அமைந்த பின்னர், தாம் அதுவரை பேசிய தமிழ்த் தேசியவாதக் கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு அந்த அரசுடன் கொஞ்சிக்குலாவ ஆரம்பித்திருக்கிறார்கள். இது வழமையாக எல்லாத் தமிழ் தலைமைகளும் காலத்துக்குக் காலம் செய்துவரும் ஒன்றுதான்.

இதில் விக்னேஸ்வரன் குழுவினர் ஏன் எதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான கேள்வி எழலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.

ஓன்று, இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இருக்கின்ற புலி ஆதரவாளர்கள் உட்பட தீவிர தமிழ் தேசியவாதிகளின் பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்தி, தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் விக்னேஸ்வரனின் அபிலாசை.

இரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சித் தலைமையின் எதேச்சாதிகாரப் போக்கை ஏற்காது இருப்பதுடன், அக்கட்சிக்கு எதிராக வெளியில் இருக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வீ.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவற்றின் துணையுடன் தமிழரசுக் கட்சியின் தலைமையை எதிர்த்து வெற்றிபெற முடியும் என விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை.

மூன்றாவதாக, தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை மீதும், அது ஆதரிக்கின்ற இன்றைய ‘நல்லாட்சி’ அரசு மீதும் நம்பிக்கை இழந்துள்ளதால், மக்களின் ஆதரவை தமது பக்கம் வென்றெடுக்கலாம் என விக்னேஸ்வரன் அணிக்கு ஏற்பட்டிருக்கும் அதீத நம்பிக்கை.

இவைதான் உண்மையில் சம்பந்தன் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலின் அடிப்படைகள். உள்ளுக்குள் பாரிய நோய் இருப்பவனுக்கு அதன் வெளிப்பாடாக காய்ச்சல் அடிப்பது போல, இந்த அடிப்படை நோய்களின் வெளிப்பாடாக வட மாகாணசபையின் சில அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிக் காய்ச்சலாக வெளிப்பாடடைந்துள்ளன. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தற்காலிக நிவாரணம் தேடி, இரு தரப்பும் சில சமரசங்களுக்கு வந்தாலும், அடிப்படையான வியாதி தீரப்போவதில்லை. அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த வியாதி மேலும் பூதாகரமாக வெடித்துக் கிளம்புவது திண்ணம்.

இங்கே பிரச்சினை என்னவெனில், அதிகாரத்துக்காக மல்லுக்கட்டி நிற்கும் இரண்டு அணிகளுக்கடையிலும் அடிப்படையான அரசியல் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதுதான். அடிப்படையான வித்தியாசம் இருக்குமானால் மக்கள் சரியான பாதையில் நிற்கும் அணியை ஆதரிக்கலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. ஒரு அணி மிதமான தமிழ் தேசியவாதத்தைப் பின்பற்ற, மற்றைய அணி தீவிரமான தமிழ் தேசியவாதத்தைப் பின்பற்றுகிறது என்பதுதான் வித்தியாசம். சாராம்சத்தில் இரண்டுமே பிற்போக்குத் தமிழ் தேசியவாதத்தைத்தான் தமது அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதில் மாற்றம் வந்து தமிழ் தேசியவாதம் என்பது முற்போக்கான திசைவழியில் ஒரு ‘தேசிய ஜனநாயகப் போராட்டமாக’ மாறும் பொழுதுதான் அடிப்படையான மாற்றம் நிகழும்.

இப்பொழுது இரண்டு அணிகளாகக் கச்சை கட்டி நிற்கும் ஏதாவது ஒரு அணியின் பின்னால் மக்கள் அணி திரள்வது, அவர்கள் மீண்டுமொருமுறை தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதில்தான் போய் முடியும். மக்களுக்கு முன்னால் உள்ள தெரிவு தற்பொழுது இருக்கும் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் இருந்து வெளியேறி எரியும் நெருப்புத் தணலுக்குள் விழுவதல்ல.

இன்றைய தேவை, தற்போது இருக்கின்ற பிற்போக்கான, காலாவதியாகிப்போன தமிழ் தலைமைக்குப் பதிலாக, புதிய முற்போக்கான திசைவழியில் சிந்திக்கின்ற, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு தலைமையை தமிழ் மக்களுக்காக உருவாக்குவதுதான். இதைச் சாத்தியமாக்குவதற்கு முற்போக்குச் சிந்தனையும், ஜனநாயக உணர்வும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்ட தமிழ் அறிவுஜீவிகள் முன்வர வேண்டும்.

வானவில் இதழ் எழுபத்தெட்டினை முழுமையாக வாசிப்பதற்கு:

VAANAVIL 78_2017

 

இதழ் 78, கட்டுரை 3

ஜூலை 2, 2017

மாயமான்கள் குறித்து மக்கள்

விழிப்பாக இருக்க வேண்டும்!

-தோழர் மணியம்

லங்கையின் இன்றைய அரசியல் சூழல் சற்றுக் குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்தக் குழப்பம் இலங்கைக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்று அல்ல. உலக ரீதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலின் விளைவே இலங்கையிலும் எதிரொலிக்கிறது எனலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரண்டு மேல்நிலை வல்லரசுகள் உலக அரங்கில் வளர்ச்சி பெற்றன. ஆனால் 90களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனில் இருந்த சோசலிச அரசு தகர்ந்து போனதுடன், அதன் பல குடியரசுகளும் பிரிந்து சென்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா ஒரேயொரு மேல்நிலை வல்லரசாக வளர்ச்சி பெற முயன்றது.

ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார, அரசியல், இராணுவ வளர்ச்சி அமெரிக்காவின் கனவைத்; தவிடுபொடியாக்கியது. அத்துடன் முதலாளித்துவப் பாதையில் அடியெடுத்து வைத்த ரஸ்யாவும் (முன்னாள் சோவியத் யூனியன்) தன்னை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியது. இந்த நிலைமைகளால் உலக அரங்கில் புதிய அணிசேர்க்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின. அதன் தாக்கம் இலங்கை உட்பட பல நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில், சில பிரத்தியேக சூழ்நிலைகளும் இந்த மாற்றங்களுக்குத் துணை புரிந்துள்ளதை அவதானிக்கலாம்.

1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே சோசலிச இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் செயற்படத் தொடங்கிவிட்டன. ஆனால் இலங்கையின் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவ வர்க்கமாக இருந்ததுடன், பிரித்தானிய காலனித்துவவாதிகளையே சார்ந்தும் இருந்தது. சுதந்திரத்துக்கு சற்று முன்னர்தான் அது தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை ஸ்தாபித்தது. அந்தக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்திய சார்பானதாகவும், உள்நாட்டில் நிலப்பிரபுத்துவ – பெருமுதலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் இருந்தது.

இலங்கை முதலாளித்துவத்தின் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

இலங்கையின் தேசிய முதலாளித்துவம் ஐ.தே.கவின் விதேசிய சார்பான போக்கை விரும்பவில்லை. எனவே இலங்கை முதலாளி வர்க்கத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு, தேசிய முதலாளி வர்க்கம் தன்னுடன் இணையக்கூடிய தொழிலாள – விவசாய – மத்தியதர வர்க்கங்களைச் சேர்த்துக்கொண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் தனது சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தது.

இதன் பின்னர், இலங்கையின் அரசியல் காட்சி நிலைமைகள் தெளிவடையத் தொடங்கின. அதாவது, ஏகாதிபத்தியமும் அதற்கு துணைபோகும் தரகு முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.கவும் இலங்கை மக்களின் பிரதான எதிரியாக வரையறுக்கப்பட்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த சிறீ.ல.சு.கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும்) ஏகாதிபத்திய விரோத, மக்கள் சார்புக் கட்சிகளாகவும், தமக்கிடையே நேசசக்திகளாகவும் இனம்காணப்பட்டன. இந்த நிலைமையில் இன்றளவும் அடிப்படையான மாற்றம் எதுவுமில்லை.

மறுபக்கத்தில், தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஐ.தே.கவின் ஒரு கிளை போலவும், யாழ்.நிலப்பிரபுத்துவ மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகவும், இனவாதக் கட்சியாகவும் செயற்பட்டதால், அக்கட்சியும் ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்குக் கட்சியாகவே இனம் காணப்பட்டது. அதிலிருந்து பிரிந்து பின்னர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவான தமிழரசுக் கட்சியும் அதே பாதையில் பயணித்ததால், அக்கட்சியும் அவ்வாறே கருதப்பட்டது.

பின்னர் தமிழரசு – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அதன் தொடர்ச்சியாக உருவான விடுதலைப் புலிகள் என்பனவும், அவர்களால் உருவாக்கப்பட்ட இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் கூட அதே ஏகாதிபத்திய சார்பு, ஐ.தே.க. சார்பு நிலைப்பாட்டை எடுத்ததினால், அவையும் மக்கள் விரோதப் பிற்போக்குக் கட்சிகளாகவே இனம் காணப்பட்டன. அந்த நிலைப்பாட்டிலும் இன்றுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை.

இலங்கையின் அரசியல் நிலைமைகளைப் பொறுத்தவரையில், இந்த அடிப்படை நிலைமைகளில் இன்றுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படாதபோதும், ஏகாதிபத்திய சக்திகளின் உதவியுடன் செயற்பட ஆரம்பித்த சில அரசியல் சக்திகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், இலங்கையின் அரசியல் நிலவரங்களைக் கணிக்கும் அளவுகோல்களை மாற்றியமைப்பதற்கு முயன்று வருகின்றன. அதிலும் குறிப்பாக அவை மக்களை ஏமாற்றவதற்காக தமது வாதங்களுக்கு இடதுசாரிக் கருத்துக்களை துணைக்கு இழுக்க முயற்சிக்கின்றன.

இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்த மார்க்சிய ரீதியிலான நிலைப்பாட்டைத் தடம் புரட்டும் முயற்சி முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜே.வி.பியின் காலத்திலாகும். பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளின் தவறுகளை உரமாகக் கொண்டு வளர்ந்த ஜே.வி.பி., தன்னை ஒரு பதிய புரட்சிகரமான இயக்கமாக காட்டிக்கொண்டு இளைஞர்களிடையே வேகமாகச் செல்வாக்குப் பெற்றது.

ஆனால் அதன் நடவடிக்கைகள் யாவும் எதிர்ப்புரட்சிகரமானவையாகவும், ஐ.தே.கவிற்கு உதவுபவையாகவும், அழிவுகரமானவையாகவும் இருந்தன. அதற்குக் காரணம், உண்மையான இடதுசாரிக் கட்சிகளையும், அவற்றின் இயல்பான நேச அணியாகவும் இருந்த சிறீ.ல.சு.கட்சியையும் அழிக்க விரும்பிய ஐ.தே.கவும், ஏகாதிபத்திய சக்திகளும் ஜே.வி.பியுடன் இரகசிய
உறவு வைத்து, அதை வழிநடாத்திச் சென்றமையினாலாகும். அதன் காரணமாகவே இலங்கையின் வரலாற்றில் என்றமில்லாதவாறு, தன்னை ஒரு இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொண்டு ஜே.வி.பி. பிற்போக்கு ஐ.தே.கவுடன் இணைந்து வேலைசெய்து வந்துள்ளது.

இந்த மாதிரியான நிலவரம் தமிழ் பகுதியிலும் ஏற்பட்டது. பாரம்பரியமான தமிழ் தலைமைகளின் கையாலாகாத்தனத்தை வைத்துக்கொண்டு உருவான தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்களையும், குறிப்பாக புலிகள் அமைப்பை ஏகாதிபத்திய சக்திகள் வழிநடாத்தும் சூழல் ஏற்பட்டது. இதற்கு ஒரு உதாரணம், புலிகள் அமைப்பு இஸ்ரேலிய சியோனிச அரசின் உளவு அமைப்பான மொசாட்டிடம் ஆயுதப் பயிற்சி பெற்றமையாகும்.

உண்மையான பாசிச அமைப்பான புலிகளை இந்த ஏகாதிபத்திய சக்திகள் ஒரு விடுதலை அமைப்பாக மாற்றிக்காட்ட முயன்றன. இதன் காரணமாக பல தமிழ் இடதுசாரிகள் கூட நிலைதவறி அதனுடன் இணைந்தனர். அதன் தாக்கம் எவ்வளவு தூரம் இருந்தது எனில், இலங்கையில் தன்னை ஒரு தூய்மையான மார்க்கிய – லெனினியவாதி எனக்கூறிச் செயற்பட்டு வந்த நா.சண்முகதாசன் போன்றவர்களே பாசிசப் புலிகளை விடுதலைவாதிகளாகச் சித்தரித்து அறிக்கைகள் விடுத்தனர். இந்தியாவிலுள்ள ‘நக்சலைற்’ குழுக்கள் சிலவும் புலிகளை ஏதோ மார்க்சிய இயக்கத்தைச் சேரந்தவர்கள் போலவே கருதிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் முன்னொருபோதும் இப்படியான பிறழ்வுகள், தடுமாற்றங்கள் இருந்தது கிடையாது.

இது ஒருபுறமிருக்க, 2015 ஜனவரி 08இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று மேற்கத்தைய சக்திகளால் ஏற்படுத்தப்பட்டு, வலதுசாரி அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர், நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்திலும் பிற்போக்கு தமிழ் தேசியவாதிகளும் (புலம்பெயர் புலித் தமிழர்கள் உட்பட), தென்னிலங்கையின் போலி இடதுசாரிகளான ஜே.விபியினரும் முக்கியமான பங்கு வகித்தனர். இவர்களது பங்களிப்பு எதிர்பார்த்ததே.

ஆனால், தம்மை உண்மையான இடதுசாரிகள் என்று சொல்லிக் கொண்டவர்களும், மனித உரிமை பேசியவர்களும், ஊடக சுதந்திரம் பேசியவர்களும், புலிகளை எதிர்ப்பதாகக் கூறியவர்களும், இன்றைய ஐ.தே.க. தலைமையிலான வலதுசாரிப் பிற்போக்கு அரசைப் பதவிக்குக் கொண்டு வருவதற்கு உதவி புரிந்தமைதான் எவ்விதத்திலும், எந்தக் காலத்திலும் நியாயப்படுத்த முடியாதது. இவர்கள் விட்ட தவறை இவர்கள் உணர்வதற்கு முன்பே எதிர்ப்புரட்சிச் சதிகாரர்கள் நாட்டுக்குள் ஆழமாக ஊடுருவிவிட்டார்கள்.

நீண்டகாலமாக மேற்கத்தைய நாடுகளில் வாசம் செய்து இலங்கைக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து வேலைசெய்து வந்த இந்தச் சதிகாரர்கள்; போர் முடிவுற்றதும் நாடு திரும்பி இப்பொழுது ஒரு குழுவாக (குறிப்பாக வட மாகாணத்தில்) வேலை செய்கின்றனர். இவர்களது வேலைகளை அவதானித்துப் பார்த்தாலே இவர்களது நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இவர்கள் தமிழ் தேசியவாதத்தைப் பின்பற்றும் சாதாரண மக்களை சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்கான வேலையை ஒருபோதும் செய்வதில்லை. மாறாக, இவர்களது ஊடுருவல் எல்லாம் இடதுசாரி சக்திகள், அவர்களைப் பாரம்பரியமாக ஆதரித்து வரும் தொழிலாளர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலேயே நடைபெறுகின்றன. அதற்கான காரணம், இந்த மக்கள் இடதுசாரிகளின் செயற்பாடுகள் வட பகுதியில் பலவீனப்பட்டுப் போனபின்னர், பாசிசப் புலிகளுக்கும், அவர்கள் உருவாக்கிய பிற்போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக உறுதியாகப் போராடி வரும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், அந்த நிலைமையை உடைப்பதே இவர்களது பிரதான நோக்கம்.

இந்தச் சதிகாரர்கள் முற்போக்கு, மனித உரிமை, ஜனநாயகம் எல்லாம் பேசி மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள். அதனால் மக்களில் ஒரு பகுதியினர் இவர்களிடம் ஏமாந்தும் போகின்றனர். இவர்களை இனம் காண்பதானால் இவர்களது அரசியல் நிலைப்பாட்டை அவதானித்தால் முடியும்.

முற்போக்குப் பேசும் இவர்கள், ஏகாதிபத்தியத்தையோ, பிற்போக்கு ஐ.தே.கவையோ, அவற்றுடன் கூடிக்குலாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிற்போக்குத் தலைமையையோ ஒருபோதும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யமாட்டார்கள். பதிலுக்கு எப்போதும் மகிந்த ராஜபக்சவையும், டக்ளஸ் தேவானந்தாவையும் எடுத்ததிற்கெல்லாம் வசைபாடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். அதிலிருந்தே அவர்களை இனம்காண முடிவதுடன், அவர்களை அவர்களது எஜமானர்கள் என்ன நோக்கத்துக்காக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, முற்போக்கு சக்திகள் இந்தவிதமான சக்திகள் குறித்து மிகவும் விழிப்பாக இருப்பதுடன், மக்களையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் சகல இன மக்களினதும் பிரதான விரோதிகள் ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களை ஆதரிக்கும் ஐ.தே.க., மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீ.ல.சு.கட்சியின் வலதுசாரிப் பிரிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவே என்பதில் நாம் எப்பொழுதும் தெளிவாக இருக்க வேண்டும். மார்க்சிய – லெலினிய அடிப்படையிலானதும், இலங்கையின் மிக உன்னதமான எமது இடதுசாரி முன்னோடித் தலைவர்களாலும் வகுத்த இந்த நிலைப்பாட்டிலிருந்து இம்மியளவு விலகினாலும், நாம் வலதுசாரிகளின் பக்கம்தான் போய்ச் சேருவோம் என்பதனை எப்பொழுதும் நினைவில் இருத்திச் செயற்பட வேண்டும்.

 

 

 

இதழ் 78, கட்டுரை 2

ஜூலை 2, 2017

ஞானசாரதேரரின் கின்னஸ் சாதனை!

-பேரின்பன்

லங்கையின் அண்மைக்கால வரலாற்றில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் நிகழ்த்திய சாதனையே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.

ஞானசாரதேரர் மீது பல வழக்குகள் இருந்ததுடன், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிடிவிறாந்தும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால்; தேரர் எதற்கும் அஞ்சாமல் சுமார் ஒருமாத காலம் வெற்றிகரமாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இலங்கையின் வரலாற்றிலேயே அகிம்சையைப் போதிக்கும் ஒரு மதத்தின் குருவைப் பிடிப்பதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வெட்கக்கேடு நடந்திருக்கிறது. இருந்தும் தேரரைப் பிடிக்க முடியவில்லை.

பின்னர் தேரர் தாமாகவே முன்வந்து நீமன்றத்தில் சரணடைந்து தனது தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சட்டத்தை மீறியும் நீதிமன்றத்தை அவமதித்தும் செயற்பட்ட ஞானசார தேரருக்கு உடனடியாகவே பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சினிமாவில் வரும் காட்சிகள் போல ‘நல்லாட்சி’ நடைபெறும் ஒரு ‘ஜனநாயக’ நாட்டில் நடந்தேறியுள்ளன.

ஞானசாரதேரரின் விவகாரத்தில் விடைகாண வேண்டிய பல விடயங்கள் பொதிந்துள்ளன.
முதலாவது விடயம், ஞானசாரதேரரின் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகளை ஆட்சியில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் சரி, எதிர்க்கட்சியினர் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி, ஒருபோதும் நேரடியாக வன்மையாகக் கண்டிக்கவில்லை. இனங்களுக்கடையில் குரோதத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுவாகவே சொல்லிக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது விடயம், தேரரைக் கைது செய்வதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தும், பொலிசாரால் ஏன் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு இலங்கைப் பொலிசார் திறமையற்றவர்களா அல்லது பொலிசாரின் கைகளை மறைமுகமாக யாராவது கட்டிப் போட்டிருந்தார்களா?

ஞானசாரதேரரை ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தான் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனால்தான் பொலிசாரால் அவரை அணுக முடியவில்லை எனவும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய பின்னர்தான், அவரை அவசரம் அவசரமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் காட்சி அரங்கேறியுள்ளதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. சம்பிக்க மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தியதாகத் தெரியவில்லை.

தமது அமைச்சர் ஒருவர் குறித்து நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக் குறித்து அரச தலைவர்கள் பாராமுகமாகப் பொறுப்பின்றி இருப்பது ‘நல்லாட்சி’யில் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று சுகித்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் காத்திரமாகச் செயற்படாமல் தமது கடமையைத் தொடர்ந்தும் தட்டிக்கழித்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாட்டின் நீதித்துறையையும், காவல்துறையையும் ஏமாற்றிய ஞானசாரதேரர் சரணடைந்த உடனேயே அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பிரசை ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டால் அவருக்கும் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுமா? வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நிச்சயமாக இல்லை.

மொத்தத்தில் ஞானசாரதேரரின் விவகாரத்தை எடுத்து நோக்கினால், கடந்த பல வருடங்களாகவே அவர் இனங்களுக்கடையில் குரோதத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும் தெரிந்திருந்தும், அவைகள் அதுபற்றி ஏனோதானோ என்றுதான் இருந்து வந்துள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையின்றி தேரர் இவ்வளவு துணிச்சலாகவும், தொடர்ச்சியாகவும் செயற்பட்டிருக்க முடியாது.

 

 

இதழ் 78, கட்டுரை 1

ஜூலை 2, 2017

நினைத்துப் பார்க்கிறேன் :

மீனவர் பிரச்னைக்கு தீர்வு

லங்கை சென்ற மோடி, மீனவர்கள் பிரச்னையைப் பற்றி பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இது ஏன் என்று கேட்டிருக்கிறார் எம்.என்.ராமசுப்பிரமணியராஜா (சென்னை-35) என்கிற வாசகர். தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்னை என்பது சிக்கலான பிரச்னை. உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்கள் பரப்பப்பட்டு, அரசியல் கலந்து, பிரச்னை என்ன என்று தெரியாமலேயே அது மேலும் சிக்கல் ஆகிவிட்டிருக்கிறது. ‘நம் நாட்டு மீனவர்கள் மீது தவறே இல்லை, இலங்கை அரசு தான் வில்லன்’ என்பதுபோல் தமிழகத்தில் நடக்கும் பேச்சும், எழுத்தும், விவாதமும் தவறு. இதுவரை இங்கு கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் உண்மையிலேயே வெளிப்படையாகப் பேசப்படாத, அதனால் மக்களுக்குத் தெரியாத, சில உண்மைகளை, பிரச்னை என்ன என்று புரியும். நம் மீனவர்களை இலங்கை அரசு அடிக்கடி கைது செய்து காவலில் வைத்திருந்தது உண்மை. ஆனால், மோடி அரசு வந்த பிறகு இது மிகவும் குறைந்திருக்கிறது. நம் மீனவர்கள் யாரும் இப்போது இலங்கை அரசின் காவலில் இல்லை. கடைசியாகக் கிடைத்த விபரப்படி (2017 ஏப்ரல் 4-ஆம் தேதி), ஆறு தமிழக மீனவர்கள் (மீன் பிடித்ததற்காக அல்ல – போதைபொருள் கடத்தியதற்காக) இலங்கை அரசின் காவலில் இருக்கிறார்கள். இப்போது பிரச்னையின் சரித்திரத்தைப் பார்ப்போம்.

இலங்கை கடலில் நம் மீனவர்கள் அத்துமீறல்

1974-76-ல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்து கையெழுத்திட்ட, இந்திய – இலங்கை கடல் வழி எல்லை ஒப்பந்தங்களில், நம் மீனவர்கள் எங்கு மீன் பிடிக்கலாம், எங்கு கூடாது என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை நம் மீனவர்கள் விரும்பவில்லை. காரணம், அதற்கு முன்பு, அவர்கள் நம் நாட்டுக் கடல்வழி எல்லையைக் கடந்து இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஒப்பந்தத்துக்குப் பிறகு, அப்படிச் செய்வது கடினமானது. ஆனால், இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்தபோது, இலங்கை அரசு அவர்கள் நாட்டு (தமிழ்) மீனவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்து, இலங்கையின் வட-கிழக்கு, வட- மேற்குப் பகுதிகளில் மீன் பிடிப்பதைத் தடை செய்திருந்தது. அதற்குக் காரணம், மீன் பிடிக்கும் போர்வையில் ஆயுதம் கடத்துதல் உட்பட பல்வேறு கடத்தல்கள் நடந்து வந்தன. அந்தச் சமயத்தில், இலங்கை மீனவர்கள் கடலுக்குள் வராததால், இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதிகளில், நம் மீனவர்கள் எல்லை மீறிச் சென்று மீன் பிடிக்கும் பழக்கம் மீண்டும் துவங்கியது. இப்படி எல்லை மீறி, இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அதிகமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் விசைப் படகுகளை வைத்தும், மற்ற இயற்கைக்கு மாறான முறைகளிலும் மீன் பிடித்ததால், இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மீனவர்கள்தானே தவிர, சிங்களம் பேசும் மீனவர்கள் அல்ல. இதுதான் பிரச்னையின் துவக்கம். இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதிக்கு அவர்கள் சென்றதால், இலங்கை பகுதியில் நம் மீனவர்கள் மீன் பிடிப்பது மட்டுமல்லாமல், அங்கு தவறான மீன் பிடி வலைகளை உபயோகிப்பதும் தான் பிரச்னையை வளர்த்தது. மேலும், இலங்கை கடற்படைக்கும் அடிக்கடி பிரச்னைகள் வர ஆரம்பித்தது.

இன்னும் முக்கியமான, யாரும் பேசாத, அதனால் எவரும் அறியாத விஷயம் – ராமேஸ்வரத்தில் பெருமளவு மீன் பிடிக்கும் விசைப் படகுகளும், மீனவர்களும் மூன்று நபர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. அவர்களது பெயர்களை இப்போது குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் பாதுகாப்பில் மீன் பிடிப்பதோடு – இன்னும் சொல்லப் போனால், மீன் பிடிப்பதை விட – இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருள்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கத்தையும் கடத்துவது முக்கியமான வியாபாரமாக இருந்து வருகிறது. மீனவர்கள் பிரச்னையைத் தீர்க்க என்ன முயற்சி செய்தாலும், கடத்தல் வியாபாரம் தடைப்படும் என்பதால், அந்த முயற்சிகள் தடைப்படுகின்றன. தவிர, இலங்கை தரப்பிலிருந்து மீன் பிடிப்பவர்கள், பெரும்பாலும் அந்த நாட்டின் வட- கிழக்குப் பகுதி தமிழ் மீனவர்கள்தான். ‘இலங்கை மீனவர்கள்’ என்றால் ‘சிங்களர்கள்’ என்று கொள்ளக் கூடாது. நம் மீனவர்களுடன் இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் அதிகம் போட்டியிடுகிறார்கள். ஆக, பிரச்னை பெரும்பாலும் தமிழ் மீனவர்களுக்குள் தான்.

தவறாக மீன் பிடிக்கும் முறைகள்

மேலும், நம் நாட்டு மீனவர்கள் கடல் மீன் வளத்தை ஒரேயடியாக அழிக்கும், செயற்கை மீன் வலைகள், ‘பர்ஸ் செய்ன்’ வலைகள், தவிர இரட்டை மடி வலைகள், மீன் பிடிக்கும் விசைப் படகுகள் போன்றவற்றை உபயோகித்து மீன் பிடிப்பதை, இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்தான் முக்கியமாக எதிர்க்கிறார்கள். தவிர, இலங்கை மீனவர்கள், அவர்கள் அரசின் கட்டுப்பாடு காரணமாக, பகலில் மட்டும் மீன் பிடிப்பார்கள். ‘நம் மீனவர்கள் இரவிலும் மீன் பிடிக்கிறார்கள். மீன் வளத்தை அழிக்கும் முறைகளை உபயோகிக்கிறார்கள்’ என்பதுதான் நம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கூறும் முக்கியப் புகார். அந்த முறையில் நம் கடல் பகுதியில் நம் மீனவர்கள் நெடுநாட்கள் மீன் பிடித்ததால், நம்முடைய கடல் பகுதியில் மீன்வளம் ஏறக்குறைய அழிந்து விட்டது. இங்கு மீன் கிடைக்காததால், நம் மீனவர்கள் எல்லையைக் கடந்து, இலங்கையின் கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டியிருக்கிறது. அங்கும் நம்முடைய மீனவர்களின் தவறான மீன பிடிமுறைகளால், இலங்கைப் பகுதி கடலிலும் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் அரசியல் காரணமாக நாம் பேச மறுக்கும் உண்மைகள்.

பிரச்னைக்கு என்ன தீர்வு

பிரச்னையைத் தீர்க்க இதுவரை நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. நம் தரப்பிலும், இலங்கைத் தரப்பிலும் மீனவர்களும், அரசாங்க பிரதிநிதிகளும் பேசியிருக்கின்றனர். ஆனால், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரச்னையைச் சமாளிக்கச் சில வழிகள் உள்ளன. கேரளம், கர்நாடகம், வங்காளத்தில் இருப்பது போல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மீனவர்களுக்கு, கூட்டுறவு முறையில் மீன் பிடிக்க, மீனவர்கள் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பது, மீன் வளத்தை அழிக்கும் அப்பட்டமான மீன்பிடி முறைகளைத் தடை செய்வது, பிரச்னைக்குக் காரணமான விசைப் படகுகளை மீனவர்களிடமிருந்து நமது அரசு திரும்ப வாங்குவது, அதற்குப் பதில் வழக்கத்தில் இருக்கும் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் டிராலர் கப்பல்களை மீனவர்கள் வாங்க நிதி உதவி செய்வது, கிழக்கு ஆசியாவில் மீன் வளத்தைப் பெருக்கும், கேஜ் மீன் வளர்ப்பு முறையை நம் மீனவர்களுக்கு பழக்குவது – இதுபோன்ற பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் தேவைப்படும். ஆனால், இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால், மீனவர்களை மையமாக வைத்து அரசியல் செய்யாமல், தெருவில் கூச்சலிடாமல், விவாதம் செய்ய வேண்டும். உண்மையை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், விஷயமறிந்தவர்களும் எல்லோருக்கும் எடுத்துக்கூறி உணர வைத்தால்தான், பிரச்னைக்குத் தீர்வு காணும் சூழ்நிலை உருவாகும்.

நல்ல சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது எது? 10 லட்சம் மீனவர்களின் வாக்குகளைக் கூறு போடும் அரசியல் கட்சிகள்; மூன்றே பேரின் ஆதிக்கத்தில் மூன்று மாவட்டங்களில் மீன் பிடிக்கும் மீனவர்கள்ளும் சிக்கியிருப்பது; மீன் பிடிப்பதும், கடத்தலும் கலந்திருப்பது; இவற்றைத் தவிர சில அரசியல் தலைவர்கள் விசைப் படகு முதலாளிகளாக இருப்பது, இவையெல்லாம் நம்முடைய பிரச்னைகள். இவற்றை நாம் சரி செய்தால்தான், தமிழக மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு வரும். இலங்கையை மட்டுமே வில்லனாகச் சித்திரிப்பதால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடாது. மாறாக, அது பிரச்னைக்குத் தீர்வு வருவதைத் தடுக்கும்.

-எஸ். குருமூர்த்தி

குறிப்பு: இந்தக் கட்டுரை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் சோ காலமான பின்னர் தற்பொழுது துக்ளக் ஆசிரியராக இருக்கின்றார். சோவைப் போலவே இவரும் இந்துத்துவ வலதுசாரிக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால் சோவைப் போலவே இலங்கை – தமிழக மீனவர்களுடைக்கிடையிலான பிரச்சினையில் யதார்த்தபூர்மான கொள்கையைப் பின்பற்றுபவர். அதன் காரணமாகவே எமது வாசகர்களின் பார்வைக்காக இந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்துள்ளோம்.

-ஆசிரியர் குழு