மனிதம் நிறைந்ததொரு

மனிதரோடு நானும்…..

தோழர் மு. கார்த்திகேசன்

நினைவாக…

-வண்ணை தெய்வம்

ச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல இன்னமும் என் மனதின் ஆழத்தில் ஆழப் பதிந்திருக்கின்றது அந்த நினைவு…! சுமார் ஒரு அறுபது வருடங்கள் இருக்கும் என நினைக்கின்றேன். யாழ் மாநகரசமையின் 10ம் வட்டாரத்தில் (அன்று யாழ் மாநகரசபை பத்து வட்டாரங்களாகத்தான் இருந்தது) ஒற்றைக்கை துரைராசா என்னும் பணபலமும், (கூலிப்) படைபலமும் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியாளராக எங்கள் கார்த்திகேசன் மாஸ்ரர் களத்தில் நின்றிருந்தார்.

கார்த்திகேசன் என்றால் யார் என்று எங்களுக்கு முகம் தெரியாது! ஆனாலும் அந்தத் தூறல் மழையையும் பொருட்படுத்தாது சிவப்புக் கொடிகளை கைகளில் பிடித்துக்கொண்டு ‘போடு புள்ளடி நட்சத்திரத்திற்கு நேரே’ என கத்திக்கொண்டு நானும் என்னுடைய வயதுடைய சில சிறிசுகளுமாக கிடங்கும் பள்ளமுமாக இருந்த அந்த மக்கிக்கிடங்கு வீதியில் வலம் வருகின்றோம்! சிறுவர்களான நாங்கள் மட்டுமல்ல எங்கள் அயலில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரது மனங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் கார்த்திகேசன் மாஸ்ரர்தான்!

எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் மாஸ்ரரை சந்தித்தபோது வியந்து நின்றேன்! காரணம் இவர் ஏனைய கல்விமான்களைப்போல படித்தவர் என்னும் கர்வம் இம்மியளவும் இல்லாதவர்! (நான் அறிந்த பல படித்த மனிதர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் கதைக்கும்போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தித்தான் பேசுவார்கள்) மிகவும் சாதுவான போக்குடையவர், மற்றவர்களுடன் உரையாடும்போதும், பிரச்சனைகளை அணுகும்போதும் நிதானமான போக்குடையவர். எந்த நேரமும் சிரித்த முகம். நண்பர்களாக இருந்தாலும் சரி உதவி கேட்டுவரும் புதியவர்களாக இருந்தாலும்சரி அவர்களை உபசரிப்பதில் அவரும் அவருடைய மனைவியாரும் பெரும் அக்கறை காட்டுவார்கள். இப்படியான ஒரு மனிதரை மிக அரிதாகவே காணமுடியும்!.

அவருடைய படிப்பிற்கும், சமூகத்தில் அவருக்கு இருந்த மதிப்பிற்கும் என் போன்றவர்களெல்லாம் ஒரு கொசுறுக்குச் சமம்! ஆனாலும் நான் அவருடைய இல்லத்திற்கு செல்கின்ற சமயங்களில் பல பெரிய மனிதரர்களுடன்; உரையாடிக்கொண்டிருந்தாலும் நான் சென்றதற்கான காரணத்தை கேட்டறிவதில் அவர் காட்டுகின்ற அக்கறையும் அந்த பெருந்தனமையையும் பெரும் மகான்களிடம்தான் காணமுடியும்!.

ஒரு சமயம் கிளிநொச்சியில் வசிக்கும எனது உறவுக்கார நண்பரொருவர் தான் கட்டிக்கொண்டிருந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு வங்கியில் கடன் பெறுவதற்கு சாட்சிக் கையெழுத்து போடுவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்தான் தேவையென வங்கி நிர்வாகம் கூற, அதற்காக எனது சகோதரனைத் தேடி வந்தார். அவர் வந்த நேரம் எனது சகோதரர் கொழும்பில் நின்ற காரணத்தால் என்ன செய்யலாம்? என என்னிடம் ஆலோசனை நேட்டார். நான் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவரை கார்த்திகேசன் மாஸ்ரரிடம் அழைத்துச் சென்றேன். நான் என்னுடைய ஒரு தேவைக்காக அப்படியானதொரு உதவியைக் கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால் அவருக்கு முன்பின் தெரியாத ஒருவருக்காக இருபத்தையாயிரம் ரூபா கடனுக்கு (அன்றைய நாட்களில் இருபத்தையாயிரம் ரூபா என்பது இன்று இருபத்தைந்து இலட்சத்திற்குச் சமம்!) பிணை நிற்கும்படி கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது! ஆனாலும் நான் கேட்டவுடன் எந்தவிதமானதொரு மறுப்பும் கூறமல் கையெழுத்துப்போட்ட உயர்ந்த குணத்தை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்குவது? அந்தச் சம்பவத்தை இன்றும் எனது அந்த நண்பன் ஆச்சரியத்தோடும், பெருமையோடும் சொல்விக் கொள்வான். ‘கார்த்திகேசன் மாஸ்ரர் எல்லோரையும்போல சாதாரண மனிதர் அல்ல’ என்று.

கலை ஆர்வத்தால் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த நான், நண்பனுக்காக ஒரு நாடகத்தை எழுதிக் கொடுத்தேன். அயலிற்குள் அந்த நாடகம் மேடையேறியது. இதை அறிந்திருந்த மாஸ்ரர் அவர்கள், பின்பொருமுறை என்னுடன் உரையாடும்போது ‘நாம் எழுதுகின்ற நாடகங்கள் நாட்டுக்கு மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்’ என்றார். உதாரணமாக ‘மனோஹரா’ என்ற திரைப்படத்தில் ஒரு நாடகம் இடம்பெறும். அதில் அந்த திரைப்படத்தில் வருகின்ற மகாராணி செய்கின்ற கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காக அவருடைய கதையையே பெயர்களில் மாற்றங்கள் செய்து நாட்டு மக்களுக்கு நடித்துக் காட்டுவார்கள்! இப்படியாக எங்கள் கலைப்படைப்புகள் மக்களை சிந்திக்க வைக்கவேண்டும் என பாறாங்கற்களாக இருந்த என் சிந்தனைகளை சிற்பங்களாக மாற உளியாக இருந்தவர்.

இலக்கிய ஆர்வத்தில் ‘சாட்டை’ என்னும் சஞ்சிகையை நான் ஆரம்பித்தபோதும் அதை நெறிப்பபடுத்தியவர். எனது இல்லத்திலேயே நடந்த வெளியீட்டு விழாவிற்கு இவர் தலைமை தாங்க, திரு.டானியல் அவர்கள் சிறப்புரையாற்றியது நான் எதிர்பாராமல் இவர்கள் எனக்குச் செய்த மரியாதை!.

கார்த்திகேசன் மாஸ்ரர் மரணித்துவிட்டார் என்ற செய்தியறிந்து, அன்றே அப்பொழுது அவர் வசித்துவந்த வட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றேன். முற்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அன்று அஞ்சலி செய்ய வந்தவர்களில் முக்கியமானவர்கள் முன்னாள் மேயராக இருந்த ‘மைனர்’ நவரத்தினம், மாநகரசபை உறுப்பினராக இருந்த கொட்டடித் தெய்வேந்திரம், தோழர் கணேசவேல், இன்னும் பலர்….

நான் சந்தித்த… நேசித்த… நல்ல மனிதர்களில் எங்கள் கார்த்திகேசன் மாஸ்ரர் என்றென்றும் என் நெஞ்சத்தில் நிறைந்திருப்பவர்!

இவரைப்பற்றி எண்ணி நயப்பதற்கு… வியப்பதற்கு… இன்னும் எத்தனையோ இருக்கின்றது. ஆனாலும் இத்தோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

இலங்கையில் கம்யூனிசம் தோத்திருக்கலாம்! ஆனாலும் தோழர் மு.கார்த்திகேசன் என்ற இந்த மனிதம் நிறைந்த மனிதன் தோற்கவில்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்து கொண்டே இருப்பார்.