லங்கை இன்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பல பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடிகள் புதியவை அல்ல, ஏற்கெனவே இருந்தவைதான். ஆனால் இப்பொழுது புதிய பரிமாணத்தையும் வளர்ச்சியையும் எட்டி நிற்கின்றன.

எல்லா மூன்றாம் உலக நாடுகளைப் போலவே இலங்கையும் நீண்ட காலம் (சுமார் 400 வருடங்கள்) மேற்கத்தைய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுதான். இப்பொழுது நேரடிக் காலனித்துவ ஆட்சி இல்லாவிடினும், மறைமுகமான காலனித்துவ ஆட்சி, அதாவது நவ காலனித்துவ ஆட்சி நிலவுகின்றது. அதனால், சுதந்திரம் பெற்று 75 வருடங்களைக் கடந்த பின்னரும் ஏகாதிபத்திய வட்டிக்கடைக்காரனான சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தி நிற்கிறோம்.

இலங்கையின் தற்போதைய பிரதான நெருக்கடி பொருளாதாரப் பிரச்சினையும், அதனால் எழுந்த விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அபிவிருத்தியின்மை, இனப்பிரச்சினை என்பனவுமாகும். இவற்றைத் தீர்ப்பதாகச் சொல்லி இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் உருவான எல்லா அரசாங்கங்களுமே மேலும் மேலும் பணம் படைத்தவர்களினதும், ஏகாதிபத்திய நாடுகளினதும் தயவில் தங்கி நின்றதால், நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து இன்று உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் (அவை எந்தக் கட்சியினராக இருந்தாலும்) இன, மத, மொழி முரண்பாடுகளைப் பயன்படுத்தி மக்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வந்திருக்கின்றன. அதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளான பொருளாதாரச் சுரண்டல், ஏகாதிபத்திய ஆதிக்கம் என்பன பின் தள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சினைகளைச் சரியான முறையில் தீர்ப்பதற்கு இயலுமான கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள்தான். இலங்கை சுதந்திரமடைந்த நேரத்திலும் பின்னரும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இதற்கான சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் அந்தக் கட்சிகள் தேவையற்ற முரண்பாடுகளால் பிளவுபட்டு நின்றதால், அவர்களது சக்தி விரயமாகி, படிப்படியாகத் தேய்ந்து, இன்று மிகவும் பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியே முதலாவது அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சி தனது கொள்கையாக பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை பூரண சுதந்திரம் பெறுவதையும், சுதந்திரம் பெற்ற பின்னர இலங்கையில் தொழிலாளர் – விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதையும் தனது கொள்கையாக அறிவித்தது. உண்மையில் இது, அன்றைய காலகட்டத்தில் உலகில் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த மற்றைய நாடுகளில் ஏற்படாத ஒரு சிறப்பு நிலைமையாகும்.

சமசமாஜக் கட்சியின் இந்தக் கொள்கைகளால் இலங்கையின் பல்வேறு பிரிவு மக்களும் ஈர்க்கப்பட்டனர். அதனால் அந்த மக்கள் கட்சியைச் சுற்றி அணிதிரளத் தொடங்கினர். அதனால் இடதுசாரிகள் கணிசமான பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர்.

அப்பொழுது உலகில் சோவியத் யூனியன் மட்டுமே ஒரேயொரு சோசலிச நாடாக இருந்தது. அந்த நாட்டை அழிப்பதற்கு உலக ஏகாதிபத்திய சக்திகள் எல்லாமே கங்கணம் கட்டி நின்றன. அவற்றின் முயற்சியை சோவியத் யூனியனுக்கு சிறப்பாகத் தலைமைதாங்கிய ஸ்டாலின் ஒன்றன்பின் ஒன்றாக முறியடித்து வந்தார். ஆனாலும், சோவியத் புரட்சிக்கு தலைமைதாங்கிய லெனினுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான லியோன் ட்ரொட்ஸ்க்கிக்கும் இடையில் ஆரம்பம் முதல் ஏற்பட்டு வந்த முரண்பாடு ஸ்டாலின் காலத்திலும் தொடர்ந்ததுடன், அது சோவியத் புரட்சிக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருந்தது.

இந்தக் கட்டத்தில்தான் இலங்கையில் சமசமாஜக் கட்சியின் தலைமை ஒரு பாரதூரமான தவறை இழைத்தது. அது சோவியத் கட்சிக்குள் நிகழ்ந்த தத்துவார்த்த – அரசியல் முரண்பாட்டில், சோவியத் புரட்சிக்கு விரோதமான நிலைப்பாட்டில் இருந்த ட்ரொட்ஸ்க்கியை ஆதரிப்பது என்ற நிலையை எடுத்ததுடன், இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியன் உலகப் பொது எதிரியான ஹிட்லரின் ஜேர்மனியைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் யுத்ததந்திரக் கூட்டணி அமைத்ததையும் எதிர்த்தது.

சமசமாஜக் கட்சித் தலைமையின் இந்தத் தவறான முடிவால், அக்கட்சியில் இருந்த உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் வேறு வழியின்றி அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, 1943 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். இடதுசாரிகள் மத்தியில் அநாவசியமாக ஏற்பட்ட இந்தப் பிளவு, மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, இலங்கையில் முதலாளித்துவ சக்திகளைப் பின்னுக்குத் தள்ளி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடதுசாரிகளுக்கு இருந்த வாய்ப்பை பலவீனப்படுத்தியது.

அதன் பின்னர், லங்கா சமசமாஜக் கட்சி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பை இழந்து, 1964 இல் தேசிய முதலாளித்துவக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்ததுடன், அதன் பின்னரும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பங்காளியாக மாறியது. இதனால் எழுந்த முரண்பாடுகளால், சமசமாஜக் கட்சியில் காலத்துக்குக் காலம் பல பிளவுகள் உருவாகி, சில சிறிய கட்சிகள் உருவாகின.

மறுபக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சியையும் இந்தப் பிளவுகள் விட்டு வைக்கவில்லை. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் கட்சியினதும், அரசினதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகிட்டா குருசேவ் மார்க்சிய – லெனினியப் பாதையைக் கைவிட்டதால், அதன் அடிப்படையில் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் விவாதங்கள் உருவாகின. இந்த விவாதங்களுக்கு மாஓ சேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வகித்தது. இந்த விவாதங்கள் இறுதியில் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியது. அந்தப் பிளவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஏற்பட்டது. சோவியத் சார்பு – சீன சார்பு என இரு அணிகளாக கட்சி பிளவுண்டது. பின்னர் இந்த இரு அணியினர் மத்தியிலும் (பிரதானமாக சீன சார்பு அணியினர் மத்தியில்) மேலும் பிளவுகள் ஏற்பட்டு, பின்னர் பிளவுண்ட அணிகளும் செயலிழந்து, இன்று தாய்க் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவினான ஒரு கட்சியாக எஞ்சி நிற்கிறது. அதன் அரசியலும் சமசமாஜக் கட்சி போல சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏதாவது ஒரு அணியின் தயவிலேயே இருந்து வருகிறது.

ஆக மொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால், இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் மிக மிகப் பலவீனமான நிலையிலேயே உள்ளன. பாராளுமன்ற சந்தர்ப்பவாதப் பாதையில் பயணித்து வரும் இந்தக் கட்சிகளின் மொத்த வாக்குவங்கியே சுமார் ஒரு வீதந்தான். இன்றைய நிலையில் இடதுசாரிகள் முதலாளித்துவக் கட்சிகளின் வால்களில் தொங்குவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளனர். இவர்கள் தொங்குகின்ற முதலாளித்துவக் கட்சிகளும் கூட பல நெருக்கடிகளில் ஆழ்ந்துபோய் உள்ளன.

எது எப்படியிருப்பினும், இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கான தீர்வு இடதுசாரிப் பாதையிலேயே உள்ளது. எனவே, இப்பொழுது தேவையானது இலங்கையில் ஒரு பலமான, மக்கள் ஆதரவைப் பெற்ற, ஐக்கியப்பட்ட இடதுசாரிக் கட்சி ஒன்றைக் கட்டியெழுப்புவதே.

ஆனால், இலங்கையில் ஒருமித்த இடதுசாரிக் கட்சியொன்றை உருவாக்குவது என்பது ‘மந்திரத்தால் மாங்காய் விழுத்தும்’ வேலை அல்ல. எனவே, வானத்திலிருந்து ‘எவரெடியாக’ ஒரு புதிய இடதுசாரிக் கட்சி வந்து குதிக்க முடியாது. ஒரு இடதுசாரிக் கட்சிக்கான ஆரம்பப் பணிகளை தற்பொழுது இருக்கின்ற எல்லாவிதமான இடதுசாரி சக்திகளையும் ஒன்றுபடுத்துவதன் மூலமே முன்னெடுக்க முடியும். இதற்கு முதலில் தேவை, இந்தச் சக்திகளுக்கிடையிலான மனம் விட்ட கலந்துரையாடல். அதற்கடுத்ததாக, இந்தக் குழுக்கள் ஒரு பொதுவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு இணைப்பு அமைப்பாக ஒரு குறிப்பிட்ட காலம் செயற்படலாம். அதன் பின்னர் ஒரே அமைப்பாக மாறுவதற்கான வழிமுறைகளுக்குச் செல்வது பற்றி சிந்திக்க முடியும்.

இடதுசாரி சக்திகள் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக இருந்தால், அவர்களுக்கு முன்னால் இப்பொழுது பாரிய தடைகள் எதுவும் இல்லை. முன்னர் இடதுசாரிகளிடையே பிளவுக்கு காரணமாக அமைந்த ஸ்டாலின் – ட்ரொட்ஸ்க்கி பிரச்சினை இப்பொழுது ஒரு பிரதான பிரச்சினை அல்ல. அதேபோல, சோவியத் – சீன பிரச்சினையும் இன்று ஒரு பிரதான பிரச்சினை அல்ல.

இன்று இடதுசாரிகளுக்கு முன்னால் உள்ள பிரச்சினை என்பது, நாட்டிலுள்ள அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு எதிர்ப்பு சக்திகளையும் ஓரணியில் திரட்டுவதுதான். இந்த அடிப்படையின் மூலமே இடதுசாரிகள் மீண்டும் பலமடையவும், நாட்டு மக்களை சரியான ஒரு மார்க்கத்தில் வழி நடத்தவும் முடியும்.

காலத்தின் கட்டாயம் இது. காலம் வழங்கியுள்ள சந்தர்ப்பமும் இதுதான். இடதுசாரிகள் இதை விளங்கிக் கொண்டு பற்றிப் பிடிப்பார்களா என்பதிலேயே இலங்கை இடதுசாரி இயக்கத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.

வானவில் இதழ் நூற்றுநாற்பத்தெட்டினை முழுமையாக வாசிப்பதற்கு:

Advertisement