செய்ய வேண்டியது என்ன?

லங்கை பிரித்தானியரிடமிருந்து 1948 பெப்ருவரி 4ஆம் திகதி சுதந்திரமடைந்து 60 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் எத்தனையோ போராட்டங்கள் நடந்து பல்லாயிரம் மனித உயிர்கள் செத்து மடிந்ததுடன், மனிதக் குருதி வெள்ளமெனப் பாய்ந்தோடியுள்ளது. இவற்றுக்கெல்லாம் காரணம் ஆட்சிபீடத்தில் அமர்ந்த மக்கள் விரோத அரசுகளும், அவற்றுக்கு ஆதரவளித்த அந்நிய வல்லாதிக்க சக்திகளும்தான்.

முதன்முதலாக 1953 ஓகஸ்ட் 12ஆம் திகதி அன்றைய ஐ.தே.க. அரசு மக்கள் மீது ஏராளமான பொருளாதாரச் சுமைகளைச் சுமத்தியதால், மக்கள் ஹர்த்தால் போராட்டம் ஒன்றில் குதித்து அன்றைய அரசையே பதவியில் இருந்து தூக்கி வீசினர். இந்தப் போராட்டம்தான் சுதந்திர இலங்கையின் பிற்போக்கிற்கு எதிரான முதலாவது மக்கள் போராட்டமாகும்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக 1956இல் நாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் ஏகாதிபத்திய – எதிர்ப்பு, மக்கள் நலன்பேண் அரசு ஒன்று உருவானது. அவர் இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாப்பதற்காகவும், தேசிய பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி என்பனவற்றைக் கட்டி எழுப்புவதற்காகவும், தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் பல்வேறு பாரிய முயற்சிகளை எடுத்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் 1959இல் அவரைப் படுகொலை செய்தன.

அதற்கு முன்னதாக, இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கவும், இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கவும் சிங்கள – தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகள் 1958இல் இனவன்செயலை உருவாக்கின.

அதன் பின்னர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அவரது மனைவி சிறீமாவோ 1960இல் தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார். அவரது அரசை 1962இல் இராணுவச் சதி மூலம் தூக்கி எறிவதற்கு இதே உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது முறியடிக்கப்பட்டது.

1970இல் மீண்டும் சிறீமாவோ தலைமையில் முற்போக்கு சக்திகளும் இணைந்த அரசு உருவாக்கப்பட்டது. ஆனால், 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் அந்த அரசைத் தூக்கி எறிவதற்காக ஜே.வி.பி. என்ற இயக்கத்தின் மூலம் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் மீண்டும் ஒரு முயற்சியில் இறங்கின. அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

1977இல் ஐ.தே.க. தலைமையில் வரலாற்றிலேயே முதல் தடவையாக மிகவும் மோசமான வலதுசாரி அடக்குமுறை அரசு ஒன்று உருவானது. அந்த அரசின் தலைவரான படுபிற்போக்குவாதியும், அமெரிக்க அடிவருடியுமான ஜே.ஆர்ஜெயவர்த்தன, ஆட்சிக்கு வந்தவுடனேயே 1977இல் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டார். இதர பகுதி மக்கள் மீதும் கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டதுடன், 1978இல் சர்வாதிகாரத்தனமான அரசியல் அமைப்பும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஜே.ஆரின் அரசு 1981இல் மலையகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் அவர்களுக்கெதிரான இனவன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டது.

பின்னர் அதுவரை காலமும் நிகழ்ந்த வன்செயல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல 1983 யூலையில் தமிழ் மக்கள் மீது வரலாறு காணாத இனவன்செயலை அவரது அரசு கட்டவிழ்த்துவிட்டு, பல நூறு உயிர்களைக் காவு கொண்டது.

அத்துடன் நின்றுவிடாது ஜே.ஆர்.அரசு தனது ஏகாதிபத்திய எஜமானர்களின் ஆலோசனைப்படி தமிழ் மக்கள் மீது நேரடி இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதே சர்வதேச – பிராந்திய வல்லாதிக்க சக்திகள் மறுபுறத்தில் தமிழ் பிற்போக்கு சக்திகளின் பின்னால் இருந்து நாட்டைப் பிரிக்கும் போராட்டத்தையும் தூண்டிவிட்டன. அதன் மூலம் 30 வருடங்களாக உள்நாட்டுப் போர் ஒன்றை உருவாக்கி நாட்டை எல்லா வழிகளிலும் அழித்து நாசம் செய்தன.

இந்த யுத்த காலத்தில் எப்படித் தமிழ் இளைஞர்கள் தனிநாட்டுக்கான போராட்டம் என்ற போர்வையில் யுத்தகளங்களில் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டார்களோ, அதேபோல் 1988 – 89 காலகட்டத்தில் ஜே.வி.பி. என்ற எதிர்ப்புரட்சிகர இயக்கத்தின் மூலம் தவறான ஆயுதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரக்கணககான சிங்கள இளைஞர்களும் அழிக்கப்பட்டனர். ஆக, ஏககாலத்தில் தனிநாட்டுப் போராட்டம் என்று சொல்லியும், புரட்சி என்று சொல்லியும் இலங்கையின் பெரும் தொகையான இளைஞர் சக்தி திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இந்த வல்லாதிக்க சக்திகள் நாட்டைப் பிரிப்பதற்கான யுத்தத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத சக்திகளுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி செய்த அதேநேரத்தில், மறுபுறத்தில் அரச இராணுவத்துக்கு சகல வழிகளிலும் உதவி பிரிவினைவாதிகளை அழிக்கவும் உதவினர். இது இரு எதிரெதிரான சக்திகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி ஒரு நாட்டைச் சீரழிக்கும் புதியவகை ஏகாதிபத்தியத் தந்திரோபாயமாகும்.

பிரிவினைவாதிகளை ஒழித்துக்கட்டி, நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றை மீண்டும் பாதுகாத்து, நாட்டை புதியதொரு பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்கையில், தாமே பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரில் அரசை ஆதரித்து சகல உதவிகளும் வழங்கிவிட்டு, பின்னர் அரசு மீது போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு என்பனவற்றைச் சுமத்தி, இறுதியில் அதை வைத்தே இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி மாற்றம் ஒன்றையும் இந்த வல்லாதிக்க சக்திகள் செய்து முடித்துள்ளனர்.

அந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் இலங்கையின் வளங்களைக் கொள்ளையிடுவது ஒருபுறமிருக்க, இலங்கையைத் தமது உலகளாவிய இராணுவ மூலோபாயத் திட்டத்துடன் இணைப்பதற்கும் திட்டமிட்டு வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களது திட்டங்களை மக்கள் இனம்கண்டு, அவற்றை அமுல்படுத்தும் கருவியாகச் செயல்படும் தற்போதைய ரணில் – மைத்திரி அரசை மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததும், இலங்கையில் பலவிதமான சூழ்ச்சிகரமான திட்டங்களைச் செயற்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் ரீதியாக அதற்காகப் பல நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.

பிரிவினைவாத, பயங்கரவாத, பாசிச பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடித்த அரசியல் தலைமையையும், களத்தில் போராடிய வீரர்களையும் பழிவாங்கும் எண்ணத்துடன் அவர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்து அவர்களைத் தொல்லைக்கு உள்ளாக்குகின்றனர்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, சில வெளிநாட்டு சக்திகள் சிங்கள – தமிழ் – முஸ்லிம் தீவிரவாத சக்திகளுக்குப் பின்னால் இருந்து ஆதரவளித்து நாட்டில் மீண்டும் இனமோதலை உருவாக்க முயல்கின்றன.

அதுமாத்திரமின்றி, தென்னிலங்கையிலும், வடக்கிலும் பலவிதமான பாதாள உலகக் குழுக்கள், அராஜகக் குழுக்கள் என்பனவற்றை உருவாக்கி, யுத்தத்தை முடிவுகட்டியதால் கிடைத்த அமைதியான வாழ்க்கையை மக்கள் வாழவிடாமல் அச்சத்தில் தவிக்க வைத்துள்ளனர்.

பொதுவாக இளம் சந்ததியினர்தான் சமூக நீதிக்கான போராட்டங்களில் முன்நிற்பர். அப்படியானவர்களைத் திசைதிருப்புவதற்காக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் திட்டமிட்ட முறையில் போதைப் பொருள் பாவனை நாடு பரந்த ரீதியில் ஊக்குவிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்கினால் ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களுடைய உள்நாட்டு அடிவருடிகளும் இணைந்து நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இலங்கையைத் தமது வேட்டைக்களமாக மாற்றுவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்து வருவதை அவதானிக்க முடியும்.

இந்தப் பிற்போக்கு சக்திகளின் சகலவிதமான நடவடிக்கைகளையும் மக்களின் ஆதரவுடன் முறியடித்துத்தான், 1956, 1970, 1994, 2000, 2005, 2010 ஆகிய ஆண்டுகளில் ஏகாதிபத்திய விரோத, தேசபக்த சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. அதன் மூலம் இலங்கையின் தேசிய சுதந்திரம், பொருளாதாரம், கலாச்சாரம் என்பனவற்றையும், சாதாரண மக்களின் வாழ்வுரிமைகளையும் ஓரளவாவது பாதுகாக்க முடிந்தது.

ஆனால் 2015 ஜனவரி 8இல் அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஏகாதிபத்திய சார்பு அரசொன்றைப் பதவியில் இருத்தியதின் மூலம், அதுவரைகாலமும் முற்போக்கு அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட நாட்டுக்குச் சார்பான, மக்களுக்குச் சார்பான முன்னேற்றங்கள் அத்தனையையும் தலைகீழாக மாற்றியமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

எனவே முற்போக்கு – தேசபக்த சக்திகளினதும், நாட்டை நேசிக்கின்ற மக்களினதும் இப்போதைய கடமை, இனி வரப்போகின்ற மாகாணசபை, நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களில் அவைரும் ஓரணியாக உறுதியுடன் நின்று தற்போது ஆட்சியில் இருக்கும் ஏகாதிபத்தியத்தாலும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற இனவாத சக்திகளாலும் ஆதரிக்கப்படுகின்ற ரணில் – மைத்திரி அரசைத் தோற்கடிப்பதுதான்.

இனம், மொழி, மதம், பிரதேசம், அரசியல் வேறுபாடு கடந்து இந்தத் தேசியக் கடமை நிறைவேற்றப்பட வேண்டும்.

வானவில் இதழ் தொண்ணூற்றுமூன்றினை வாசிப்பதற்கு:

VAANAVIL 93_2018

Advertisements